மனித உரிமைகள் | Human rights

மனித உரிமைகள் | 9th Social Science New Text Book Study Notes for TNPSC, TN TET, UPSC Exams

இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் விளக்குகிறது. குழந்தைகள் உரிமைகள் , பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் , பெண்கள் உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற மனித உரிமை வகைமைகள் பற்றியும் விளக்குகிறது.

மனித உரிமைகள் என்றால் என்ன?
ஐ.நா. சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது."இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும். 

எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது.

மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் நாள் கொண்டாடப்படுகிறது

மனித உரிமையின் வரலாற்றுவேர்கள், உலகின் பல முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை நிலை நிறுத்தியுள்ளன.

இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும், அக்டோபர் 24, 1945இல் ஐ.நா. சபை தொடங்கப்பட்டது.

ஐ.நா. சபை நாள் அக்டோபர் 24

மனித உரிமைகளைநடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (The Universal Declaration of Human Rights) பெரும்பங்கு வகிக்கின்றது.

நெல்சன் மண்டேலா இன ஒதுக்கல் எனப்படும் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியபோது, சிறையில் தள்ளப்பட்டார்.


உள்நாட்டிலும், உலக நாடுகளிடமிருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு பெருகியபோது, இனரீதியான உள்நாட்டு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தினால், தென்னாப்பிரிக்க தலைவர் F.W.டி கிளார்க் 1990-ல் அவரை விடுதலை செய்தார்.

மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவிற்கு வந்தது. 1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் நடைபெற்றபொழுது, மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்.

உலகளாவிய மனித உரிமைகள்
பேரறிக்கை (UDHR) வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின்பல்வேறுபகுதிகளிலிருந்து கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவியமனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும். அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்