புறநானூறு

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

- கண்ணகனார்
பொருள் : பொன்னும் பவளமும் முத்தும் பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும், தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோத்து அருமையான அணிகலன் அமைக்கும்போது, தம்முள் ஒருங்கே சேர்வதுபோல, என்றும் சான்றோர் சான்றோர் பக்கமே இருப்பர்; சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேர்வர்.

சொற்பொருள்:

  • துகிர் – பவளம்
  • மன்னிய – நிலைபெற்ற
  • செய – தொலைவு
  • தொடை – மாலை
  • கலம் – அணி

இலக்கணக்குறிப்பு:

  • பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
  • மாமாலை – உரிச்சொற்றொடர்
  • அருவிலை – பண்புத்தொகை 
  • நன்கலம் – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம் : 
புணர்ந்து , புணர் + த் (ந்) + த் + உ. புணர் - பகுதி த் - சந்தி , த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, உ - வினையெச்சவிகுதி

பிரித்தறிதல்:
அருவிலை = அருமை + விலை
நன்கலம் = நன்மை + கலம்

ஆசிரியர் குறிப்பு:
  • இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
  • கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
  • அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
  • அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.
நூல் குறிப்பு:
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
  • இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
  • தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்