ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் டி.எஸ்.கனகா காலமானார்

ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் நிபுணர் டி.எஸ்.கனகா சென்னையில் (14-11-2018) புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் நிபுணர் மட்டுமல்ல டி.எஸ். கனகா, உலகளவில் 3-வது பெண் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் பிரிவில், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த மருத்துவர் டி.எஸ்.கனகா கடந்த 1990-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். நரம்பியல் பிரிவை ஏராளமான பெண்கள் தேர்வு செய்து படிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாகவும், உந்து சக்தியாகவும் கனகா விளங்கினார்.

மருத்துவர் கனகாவின் மருமகளும், நரம்பியல் மருத்துவரான ஜி.விஜயா தற்போது வேலூரில் உள்ள சிறீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பணி புரிந்து வருகிறார். மருத்துவர் கனகா குறித்து மருத்துவர் விஜயா கூறியதாவது:
''ஆசியாவில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதல் பெண் மட்டுமல்ல மருத்துவர் டி.எஸ்.கனகா, உலக அளவில் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய 11 வயதில் இருந்து நான் அத்தையைப் பார்த்து வளர்ந்து வந்தேன், அதனால்தான் அவரைப் போலவே நரம்பியல் நிபுணராக முடிந்தது. எங்கள் குடும்பத்தில் நான் 2-வது நரம்பியல்அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்த போது, , ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாகவும் கனகா 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

மருத்துவர் கனகா தனது ஓய்வுக்குப் பின் ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவ விரும்பினார், இலக்காக வைத்திருந்தார். முதியோர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர் கனகா விரும்பினார். குரோம்பேட்டையில் சிறீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி சுகாதார மையம் மற்றும் ஆய்வு மையத்தை நிறுவினார். கடைசிக் காலத்தில் தன்னுடைய ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் இந்த மையத்துக்கே செலவிட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்