சமச்சீர்க்கல்வி தமிழ்ப்பாடத்திலிருந்து தொகுக்கப்பட்ட
TNPSC, TET, PGTRB, UGTRB, TN Police Exams
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
சொல்லின் ஈற்று அயலெழுத்து அடிப்படையாகக்கொண்டு குற்றியலுகரம் அறுவகையாகப் பிரிப்பர்.
அவை,
1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்,
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வல்லினத்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
தமிழ் இலக்கணம் குற்றியலிகரம்
1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்நெடில், உயிர்மெய் நெடில் எழுத்துகளை அடுத்து வரும் உகரமேறிய வல்லின எழுத்துகள் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) நாகு, காசு, ஆடு, மாது, கோபு, ஆறு
நெடில்தொடர்க் குற்றியலுகரம் கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளை ஈற்றில்கொண்டு ஈரெழுத்துச் சொல்லாகவே வரும்.
நெடில்தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துகளைப் பெற்றுவரும்.
(எ.கா) ஆடு, மாடு, காது
ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துகளைப் பெற்று வரும்.
(எ.கா.) சுக்கு, பாலாறு, காட்டாறு
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
கு, சு, து, என்னும் வல்லின மெய் மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தைத் (ஃ) தொடர்ந்து வருவது ஆய்தத்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) எஃகு, கஃசு. அஃது
3.உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்தொடர் குற்றியலுகரம் என்பது கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளுக்குமுன் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைப்பெற்று வரும். ஈற்று அயலெழுத்து உயிர்மெய்க் குறிலாகவோ நெடிலாகவோ இருக்கும்.
(எ.கா) அழகு, அரசு. பண்பாடு, உனது, உருபு, பாலாறு
4. வல்லினத்தொடர்க் (வன்தொடர்) குற்றியலுகரம்
கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளுக்கு முன்பு வல்லின மெய் எழுத்து (க், ச், ட், த், ப், ற்) இடம்பெறுவது வன்றொடர் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) சுக்கு, கச்சு, பட்டு, பத்து, காப்பு, பற்று
5.மென்தொடர்க் (மென்றொடர்) குற்றியலுகரம்
கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளுக்கு முன்பு மெல்லின மெய் எழுத்து (ங், ஞ், ண், ந், ம், ன்) இடம்பெறுவது மென்றொடர் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) சங்கு, மஞ்சு, நண்டு, சந்து, காம்பு, கன்று
6.இடைத்தொடர்க் குற்றியலுகரம்
கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளுக்கு முன்பு இடையின மெய் எழுத்து (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) இடம்பெறுவது இடைத்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) கொய்து, சார்பு, மூழ்கு

0 கருத்துகள்