திருக்குற்றாலக் குறவஞ்சி - 6 ஆம் வகுப்பு சமச்சீர்க்கல்வி


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் 

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர் 

கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர் 

தேனருவித்திரை எழும்பி வானின்வழி ஒழுகும் 

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் 

கூனல் இளம்பிறைமுடித்த வேணியலங்காரர் 

குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே!


ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூலுளை சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே

நூல் குறிப்பு :

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. 

இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

சொற்பொருள்:

வானரங்கள் – ஆண் குரங்குகள்

மந்தி – பெண் குரங்குகள்

வான்கவிகள் – தேவர்கள்

காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை

பரிக்கால் – குதிரை 

வேணி – சடை

மின்னார் – பெண்கள்

மருங்கு – இடை 

11th Tamil திருக்குற்றாலக்குறவஞ்சி

கருத்துரையிடுக

0 கருத்துகள்