சமய முன்னோடிகள் - சுந்தரர்

திருக்கேதாரம் 

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.
-சுந்தரர்


சொல்லும் பொருளும்

பண் - இசை
கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை
மதவேழங்கள் - மதயானைகள்
முரலும் - முழங்கும்
பழவெய் - முதிர்ந்த மூங்கில்

பாடலின் பொருள்

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் கிண் என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

நூல் வெளி

  • சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். 
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்படுள்ளன. 
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
  • தே + ஆரம் இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்