ad

ந.மு.வேங்கடசாமி நாட்டார்

நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்  (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944)  வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.

2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்.

அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம்ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.

தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
 
திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார்.

1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார்.
ஆக்கங்கள் :

வேளிர் வரலாறு (1915)
நக்கீரர் (1919)
இந்நூல் இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது)
கபிலர் (1921)
கள்ளர் சரித்திரம் (1923)
சமுதாய வரலாறாகக் கருதப்படும் இந்நூல், "கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி, தனது தென்பாண்டிச் சிங்கம் நூலின் முன்னுரையில்,‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று எழுதியுள்ளார்.
கண்ணகி வரலாறும் - கற்பும் மாண்பும் (1924)
சோழர் சரித்திரம் (1928)
கட்டுரைத் திரட்டு
சில செய்யுள்கள்
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது

உரைகள்:
அகநானூறு
இன்னா நாற்பது
களவழி நாற்பது
கார் நாற்பது
சிலப்பதிகாரம்
மணிமேகலை

வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது.

Post a Comment

0 Comments