தெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்

 
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
           உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
           உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
           பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்        
           பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
           மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
           வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
           தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
           சண்முகத் தெய்வமணியே!  (8)
- இராமலிங்க அடிகள் 




இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும்பாமாலையில் உள்ளது.

இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணி மாலையின் 8ஆம் பாடல்.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான இராமலிங்க அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.

சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.

இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார்.

வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் இதனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.

திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. ஐயா, இந்த செய்யுளில் இரண்டாம் அடியில், "உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்" என்று இருக்கிறது. "புறமொன்று" என்பது சரியானதா? "புறம்பொன்று " என்பது சரியானதா? புறம்பொன்று என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  2. 'புறமொன்று' என்பதே சரி...

    பதிலளிநீக்கு