TNPSC Group II புதிய பாடத்திட்டம் என்ன சொல்கிறது?

வணக்கம் சகோதர-சகோதரிகளே, 

பொதுவாக நான் போட்டித் தேர்வுகளை பற்றி சமீப காலமாக அதிகம் பேசவில்லை. ஏற்கனவே பல நிறைய விஷயங்களை பகிர்ந்தாகி விட்டதாலும், நட்பு வட்டாரத்தில் அநேகம் பேர் தேர்ச்சி பெற்று வேலையில் உள்ள காரணத்தாலும், நானும் எவ்வளவு நாளைக்குத்தான் இதனைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க போகிறோம் என்று நினைத்தாலும் சற்று குறைத்துக் கொண்டேன்.

நான் போட்டித் தேர்விற்க்காகப் படித்தேன், தெரிந்த விஷயங்களை எனது உடன்பிறப்புகளாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்டேன், அவ்வளவுதான். 

மாறாக இதனை வைத்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு என்றும் இருந்தது இல்லை. 
ஆனால், நேற்று வெளிவந்துள்ள GROUP 02A மற்றும் GROUP 02 தேர்வுகளுக்கு உண்டான பாடத்திட்டத்தில் தேர்வாணையத்தால் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

என்னிடமும், பல பேர் குறுந்செய்தியிலும், அலைபேசியிலும் தொடர்பு கொண்டு இதனைப் பற்றி சற்று தெளிவு படுத்துமாறு கூறியதால் இந்தப் பதிவினை தொடர்கிறேன். 

இங்கே ஒவ்வொருத்தரும் அவரவர் மன நிலையை கருத்தில் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள். நான், அனைத்து போட்டியாளர்களின் மன நிலையினையும் இந்தப் பதிவில் தொட வேண்டும் என்று விரும்புகிறேன். 

அனைத்து ரகப் போட்டியாளர்களையம் கருத்தில் கொண்டு, முதலில் இதில் உள்ள சாதக-பாதகங்கள் என்னவென்று பார்த்தால்,

௧. நேரடி உதவியாளருக்கான, குரூப்-2A விற்க்கான தேர்வு முறை முன்பு இருந்த நிலையை விட கடினமாக்கப்பட்டு உள்ளது. அதாவது, பழைய பாடத் திட்டத்தினை விட சற்று அதிகமாகப் படிக்க வேண்டும். இதில் கடினமாக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தையினை தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் நினைவு கூறலாம். 

௨. பொது அறிவு பகுதில் போதுமான கவனத்தினை செலுத்தாமல், தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப் பகுதியினை மட்டும் நம்பி அதனை முற்றிலுமாக படித்து வந்த மாணவர்கள் முதல் நிலைத் தேர்வில் பாதிக்கப்படுவர்.

௩. முந்தைய பாடத் திட்டத்தின் படி, மொழிப் பாடங்களில் மிகுந்த ஆர்வமும், இலக்கணம் போன்ற பகுதிகளில் இயற்கையிலேயே பள்ளிக்காலம் முதல் தன்னிறைவையும் பெற்றவர்கள், முதல்நிலைத் தேர்வில் 100-க்கு 95 வரை மதிப்பெண்கள் பெறுவார்கள். 

அவர்கள், பொது அறிவில் சில பாடப் பகுதிகளை தவிர்த்தாலும், வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருந்தது. இப்பொழுது, முதல் நிலை தேர்விற்க்காக, அனைத்து பொது அறிவு பாடங்களையும் கட்டாயம் படித்தாக வேண்டும்.
ஆனால், படித்த மொழிப் பாடங்கள், இவர்களுக்கு முதன்மைத் தேர்வில் கை கொடுக்கும்.

௪. இதே போல் மொழிப் பாடங்களை சரியாக படிக்க இயலாமல் பொது அறிவு மற்றும் கணக்கு பகுதிகளை நன்கு படித்து தேர்ச்சி பெற்றோரும் உண்டு. அவர்களை போன்றவர்களுக்கு முதல் நிலை தேர்வு எளிதாகவும், முதன்மைத் தேர்வு சற்று கடினமாகவும் இருக்கும்.

௫. முதன்மைத் தேர்வில் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற நிர்ணயிக்கப்பட்டு இருக்கும், மொழி மாற்றம் (Translation) தமிழை மட்டுமே நன்கு தெரிந்தவர்களுக்கும், அல்லது ஆங்கிலத்தினை மட்டுமே நன்கு தெரிந்தவர்களுக்கும் சற்று சிரமமாக இருக்கும். 

கிராமமோ அல்லது நகரமோ, பள்ளி காலம் முதல், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டினையும் சற்று தெரிந்தவர்கள் இந்தப் பகுதியினைக் கடந்து விடுவார்கள். ஆனால், இதில் தகுதி பெற 100க்கு 25 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் மொழி மாற்றத்தில் தங்களை பலவீனமாக கருதுபவர்கள், இந்தப் பகுதிக்கு மட்டும் சற்று கூடுதல் கவனம் கொடுத்துப் படித்தால், பின்னால் உள்ள மதிப்பெண்களுக்கான விரிவான விடை பகுதில் கலக்கி விடலாம்.

௬. இதுவரை முதன்மைத் தேர்வில் (Mains) பொது அறிவியல், நாட்டுநடப்பு, அரசியல் அறிவியல் என்று அனைத்தையும் மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைந்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பாடத் திட்டம் சற்றே சறுக்கல் தான்.
நமது மொழி ஆளுமை, ஒரு செய்தியை புரியும்படி பத்தி பத்தியாக எழுதும் திறன், அந்த கண நேரத்தில் யோசிக்கும் திறன் போன்றவைகளும் முதன்மைத் தேர்விற்கு கை கொடுக்கும். எனவே, இத்தகைய திறனை உடையோர் முதன்மை தேர்வில் தங்கள் திறமையை நன்கு நிலை நாட்டலாம்.

௭. முந்தைய பாடத் திட்டத்தின் படி, குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் (Prelim) பயிற்சி நிலையம் எங்கும் செல்லாமல், சுயமாக படித்து தேறியவர்கள் கூட, முதன்மைத் தேர்விற்க்காக (Mains) கட்டாயம் பயிற்சி நிலையங்களை நோக்கி செல்லும் நிலை இருந்தது. 

ஆனால், இந்தப் பாடத் திட்டத்தின் படி, உங்களுக்கு தேவையான புத்தகங்கள் மட்டும் இருந்தால், நான் மேலே கூறி உள்ளவாறு சூழ்நிலையைக் கையாளும் திறன் இருந்தால், முதன்மை தேர்வினைக் கூட வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி அடையலாம். 

எனவே, இது பயிற்சி நிலையங்களுக்கு சாதகமான பாடத் திட்டம் என்று பொதுவாக சொல்ல இயலாது. உங்களின் தரமே உங்களுக்கு பயிற்சி நிலையங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதனை முடிவு செய்யும். 

௮. சில பேர் மொழிப் பாடங்களில் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) உள்ள உரைநடைப் பகுதியினை நன்றாக மனப்பாடம் செய்து படித்து விடுவார்கள், ஆனால், அவர்களுக்கு இலக்கணம் கொஞ்சம் கூட வராமல் தடுமாறுவார்கள்.
பொது பாடப் பகுதியில் (General Studies) நன்கு மதிப்பெண் எடுத்தும், இலக்கணம் வராமல், தேர்ச்சி அடைய தடுமாறுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்தப் பாடத் திட்டம் வரப்பிரசாதம். இலக்கண பயன்பாடு சுத்தமாக இல்லை.

௯. நாம் நமது வீட்டிற்கு ஒரு கார் ஓட்டுநரை தேர்வு செய்யும் பொழுது அவருக்கு கார் நன்றாக ஓட்டத் தெரியுமா?, அவர் ஓட்டுநர் உரிமம் எல்லாம் வைத்து உள்ளாரா?, அவருக்கு ஓட்டுநர் பணியில் எந்த அளவு அனுபவம் உள்ளது? என்றெல்லாம் நாம் பார்ப்பது போல், தேர்வாணையமும் அலுவலக நடைமுறைகளை கருத்தில் கொண்டு அதனை முதன்மை பாடத் திட்டத்தில் சேர்த்து இருக்கிறது. இதற்கு நம்மை தகுதி படுத்த வேண்டுமே தவிர குறை கூற ஒன்றும் இல்லை. 

௧௦. ஏற்கனவே, குரூப்-4, குரூப்-2A தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து தற்போது அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இந்தப் பாடத் திட்டம் சாதகமாக அமையும். சற்றே முயன்றால் அவர்கள் குரூப்-2 தேர்வினை எளிதாக தேர்ச்சி பெறலாம்.
௧௧. மூன்று, நான்கு ஆண்டுகளாக படித்துக் கொண்டு, பெரும்பாலான ஆறு முதல் பன்னிரண்டு வரை அனைத்து வகுப்பு மொழிப் பாடங்களை படித்து முடித்து, இன்னும் ஒரு வெற்றிக்காக முயற்சித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இது பெரும் பின்னடைவு. 

ஏற்கனவே, பழைய சமச்சீர் புத்தகம், புதிய சமச்சீர் புத்தகம் என்று குழப்பத்தில் உள்ள அவர்கள் இனி இந்த சோதனையையும் எதிர் கொள்ள வேண்டும். 

௧௨. இதுவரை குரூப்-4 , கிரமாக நிர்வாக அலுவலர் (VAO), மற்றும் குரூப்-2A போன்ற தேர்வுகளுக்கு ஒரே பாடத்திட்டம் இருந்தது. குறிப்பிட்ட அந்த பாடப் பகுதிகளை தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தவர்கள், மேற்கண்ட மூன்று பதவிகளில் ஏதேனும் ஒன்றினை அடையும் நிலை இருந்தது. இனி, அந்த வரிசையில் குரூப்-2A இல்லை. இது புதிய போட்டியாளர்களுக்கு சற்று பாதிப்பாக அமையும்.

௧௩. இந்தப் பாடத் திட்டம், நமக்கு சாதகமாக இல்லை என்று கருதும் புதிய போட்டியாளர்கள், அல்லது எனக்கு மொழிப் பாடம் தான் நன்கு வரும் என்று இன்னும் ஒரு வேலைக்காக போரடிக் கொண்டு இருப்பவர்கள் தங்களுக்கான குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கூடுதல் கவனத்தினை செலுத்தி வெற்றி பெறலாம்.

இதனை உங்களை தரமிறக்கும் பொருட்டு நான் சொல்லவில்லை. குரூப்-4 மற்றும் குரூப்-2A என இரண்டையும் மாறி மாறி படித்து எந்த தேர்விலும் தேர்ச்சி பெறாமல் போய்விட வேண்டாம் என்ற நல்லெண்ணத்திலேயே, இப்போது உள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் சொல்கிறேன்.

உதாரணமாக, தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு உயர் நிலை முடித்து இருப்பவர்கள், குரூப்-4 பாடத் திட்டத்தினை தொடர்ந்து படித்தால் கண்டிப்பாக வரும் தேர்வில் தேர்ச்சி அடைந்து விடுவார்கள். கவனச் சிதறலுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது.
௧௪. குரூப்-4 நிலையில், ஏதேனும் ஒரு அரசு வேலை வாங்கிக் கொண்டு பின்னர் அடுத்த கட்ட குரூப்-2A மற்றும் குரூப்-2 விற்க்கான, இந்தப் பாடத் திட்டத்தினை படித்தல் என்பது புதியவர்களுக்கு இன்னும் சிறப்பாக அமையும்.
௧௫. எனது மனதில் தோன்றுவது என்னவென்றால், முதல் நிலை தேர்வில் மொழிப் பாடத்தினை முற்றிலுமாக நீக்காமல், இலக்கண பயன்பாடு தொடர்பாக ஐம்பது கேள்விகளாவது இடம் பெற செய்ய வேண்டும். 

அவ்வாறு செய்து இருந்தால் இந்தப் பாடத் திட்டம் இன்னும் சிறப்பாக அமையும்.

ஏனென்றால் இன்னும் நம்மில் பல பேர் ல, ழ, ள வேறுபாடு தெரியாமல் தானே தமிழர் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

முடிவாக மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும், நாமும் அதற்க்கு தகுந்தாற் போல் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். 

வாய்ப்புகளில் உள்ள கஷ்டங்களை பார்க்காமல், கஷ்டங்களில் உள்ள வாய்ப்புகளைத் தேடுவோம்.

நீங்களும் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.

கருத்துரையிடுக

1 கருத்துகள்