தெரிந்த மாறாத அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது அளவீடு எனப்படும்.
தெரிந்த மாறாத அளவு அலகு எனப்படும். இங்கு மீட்டர், கிலோ கிராம், நிமிடம் போன்றவை அலகுகள்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவீட்டைத் தரும் அளவை திட்ட அளவீடு என்கிறோம். திட்ட அளவீட்டில் பயன்படுத்தப்படும் அலகுகள் திட்ட அலகுகள் எனப்படும். முழம், சாண் போன்றவை திட்ட அலகுகள் ஆகாது. மீட்டர், கிலோ கிராம், வினாடி போன்றவை திட்ட அலகுகளாகும்.
நீளம், நிறை, காலம் போன்ற அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம். ஏனெனில், இவற்றை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது. அடிப்படை அளவுகளை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும்.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு அலகு முறைகளை நீளம், நிறை, காலம் முதலியவற்றை அளக்கப் பயன்படுத்தி வந்தனர். அவற்றுள் சில.
பல அலகு முறைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க உலகில் உள்ள எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பன்னாட்டு அலகுமுறை 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதனை SI அலகு முறை என்பர்.
SI அலகு முறையில் அடிப்படை அளவுகள் நீளம், நிறை, காலம்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடைப்பட்ட தொலைவை கிலோமீட்டர் போன்ற அதிகமான நீளஅலகாலும், குறைந்த நீளங்களான பென்சிலின் நீளம், பேனா முனையின் நீளம் போன்றவற்றைச் சென்டிமீட்டர் மற்றும் மில்லிமீட்டர் போன்ற அலகுகளாலும் அளவிடுகிறோம். இதனையே நீளத்தின் பன்மடங்குகள், துணைப் பன்மடங்குகள் என்கிறோம்.
ஒரு பொருளின் நிறை என்பது, அப்பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவு. நிறையின் SI அலகு கிலோகிராம். நிறையை அளவிடச் சட்டத் தராசு, இயற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகின்றன.
அதிக நிறையை உடைய கரும்புக்கட்டு, பருத்திப் பொதி போன்றவற்றை அளவிட குவிண்டால், மெட்ரிக் டன் போன்ற அலகுகளைப் பயன்படுத்துகிறோம். இதேபோல் குறைவான அளவுள்ள தங்கம்,வெள்ளி, நறுமணப்பொருள்களை அளவிட கிராம் மற்றும் மில்லிகிராம் போன்ற அலகுகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றையே நிறையின் பன்மடங்குகள், துணைப் பன்மடங்குகள் என்கிறோம். 1 கிராம் = 1000மில்லிகிராம் 1 கிலோ கிராம் = 1000கிராம் 1 குவிண்டால் = 100கிலோகிராம் 1 மெட்ரிக் டன் = 1000கிலோகிராம்
நேரம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட கால அளவு.
SI அலகு வினாடி. வினாடிக்கும் அதிகமான கால அளவை அளக்க நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு போன்ற பன்மடங்கு அலகுகளையும், வினாடிக்கும் குறைவான கால அளவை அளக்க மில்லிவினாடி, மைக்ரோவினாடி போன்ற துணைப்பன்மடங்கு அலகுகளையும் பயன்படுகின்றன.
1 நிமிடம் = 60 வினாடி 1 மணி = 60 நிமிடம் 1 நாள் = 24 மணி 1ஆண்டு = 365 1/4 நாள் 1 வினாடி = 1000 மில்லிவினாடி 1 வினாடி = 1000000 மைக்ரோவினாடி
0 கருத்துகள்