இந்திய பாதுகாப்புச் சேவைகள்
இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், நமது பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்தபதவி நிலையையும் வகிக்கிறார். அவர் இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஆவார்.
இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள்
இந்திய ஆயுதப் படைகள் (Indian Armed Forces) - ஆயுதப் படையானது நாட்டின் இராணுவப் படை , கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முதன்மைப் படைகள் ஆகும். அவைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன .
துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces) - அசாம் ரைபில்ஸ், சிறப்பு எல்லைப் புறப்படை ஆகியன துணை இராணுவப் படை களாகும்.
மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces) - BSF, CRPF, ITBP, CISF மற்றும் SSB ஆகியன மத்திய ஆயுதக் காவல் படைகளாகும். அவைகள் மத்திய உள்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படுகின்றன.
CAPF என்ற படைப் பிரிவுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு இராணுவம் மற்றும் காவல் துறை யுடன் இணைந்து பணியாற்றுகின்றன.
இந்திய ஆயுதப் படைகள்
இராணுவப் படை (Army)
இந்திய இராணுவப் படை என்பது நில அடிபடையிலான ஒரு பிரிவு ஆகும். இது உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப்பிரிவு ஆகும். இது ஜெனரல் (General) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை பாதுகாத்தல், உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் அமைதியையும், பாதுகாப்பையும் பேணுதல் ஆகியன இந்திய இராணுவப் படையின் முதன்மைப் பணிகளாகும்.
மேலும் இது இயற்கை பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான மீட்புப் பணிகளையும் செய்கிறது. இந்திய இராணுவம் ரெஜிமென்ட்' என்ற ஒரு அமைப்பு முறையைக் கொண்டது. இது செயல்பாட்டு ரீதியாகவும் புவியியல் அடிபடையிலும் ஏழு படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடற்படை (Navy)
கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதாகும். மேலும் நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து இந்திய நிலைப்பகுதி, மக்கள், கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் (அ) ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இது அட்மிரல் (Admiral) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.
விமானப்படை (Air Force)
இந்திய விமானப்படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் வான்வெளி படை ஆகும். இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும், ஆயுத மோதலின் போது வான்வழிப் போரை நடத்துவதும் இதன் முதன்மை நோக்கம் ஆகும். இது ஏர் சீப் மார்ஷல் (Air Chief Marshal) என்றழக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது ஏழு படைப் பிரிவுகளைக் கொண்டது.
0 கருத்துகள்