இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்
கிருஷ்ணதேவராயர்
- துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.
- இவர் இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
- ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது. இம்முயற்சியில் வெற்றிபெற்ற பின்னர், குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது. இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். கிருஷ்ணதேவராயர் பாமினி சுல்தான் முகமதுஷாவை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார்.
- மேலும் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். சமாதானம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்த பிரதாபருத்திரன், தமது மகளைக் கிருஷ்ணதேவராயருக்குத் திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணதேவராயர் தாம் கைப்பற்றிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார். மேலும், போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
சிறந்த கட்டட வல்லுநர்
- கிருஷ்ணதேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும், நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினார்.
- கிருஷ்ணதேவராயர் தமது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கட்டினார்.
- போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார். அவரது பெயருக்குப் புகழை சேர்க்கும் வண்ணம் அவை ராயகோபுரம் என அழைக்கப்பட்டன.
பெரும் படையொன்றை உருவாக்கிய அவர், பல வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார். - அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை அவர் இறக்குமதி செய்தார். அவை கப்பல்கள் மூலம் மேற்கு கடற்கரையிலுள்ள விஜயநகர துறைமுகங்களை வந்தடைந்தன.
- போர்த்துகீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.
இலக்கியம், கலை, கட்டடக்கலையின் புரவலர்
- கிருஷ்ணதேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.
- அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர். அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்.
- கிருஷ்ணதேவராயரைத் தொடர்ந்து அவருடைய இளைய சகோதரர் அச்சுதராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
0 கருத்துகள்