நீதிக்கட்சியின் ஆட்சி | TNPSC Group I & Group II Exams


சென்னை மாகாணத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆட்சி தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நீதிக்கட்சியின் கொள்கையும் நோக்கங்களும் தனித்தன்மையுடையதாகவும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டதாகவும் காணப்பட்டன. நீதிக்கட்சி பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு, பணித்துறை மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு சமூகப்புரட்சியை உருவாக்கியது.

நீதிக்கட்சியின் தோற்றம்

பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியான நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியதற்கான முக்கிய காரணம் சமூகத்தில் பிராமணரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததேயாகும். சிவில் பணித்துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்கள் அதிக சதவிகித இடங்களில் அங்கம் வகித்தனர். மேலும், சென்னை சட்ட மன்றத்திலும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பிராமணர் அல்லாதார் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தது. பத்திரிகைத்துறையிலும் பிராமணர்கள் முற்றுரிமை பெற்றிருந்தனர். தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியம் ஆகியன இருளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதால் பிராமணர் அல்லாதோர் பெரும் உற்சாகம் அடைந்தனர். குறிப்பாக 1856 ஆம் ஆண்டு மறைத்திரு. ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்' என்ற நூல் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது. பின்னர், ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாத அய்யர் போன்ற தமிழ் அறிஞர்களின் முயற்சியால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன. வி. கனகசபை பிள்ளையின் 1800 ஆண்டுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் மிகச் சிறந்த நாகரீகத்தை படைத்திருந்தனர் என்பதை சுட்டிக் காட்டினார். பிராமணர் அல்லாதோர் மத்தியில் திராவிட உணர்வுகளை இது மேலும் வளர்த்தது. மேற்கூறிய காரணங்களின் ஒட்டுமொத்த விளைவாக பிராமணர் அல்லாதார் இயக்கமும் நீதிக்கட்சியும் தோன்றின.

நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பை வளர்ப்பதற்கு டாக்டர் சி. நடேச முதலியார் முக்கிய பங்காற்றினார். 1916 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. பிட்டி - தியாகராய செட்டி, டாக்டர் டி.எம்.நாயர், பி. ராமராய நிங்கர் (பனகல் அரசர்) மற்றும் சி. நடேச முதலியார் போன்ற தலைவர்கள் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தனர். தென்னிந்திய நல உரிமைச்சங்கம் 'ஜஸ்டிஸ்' (நீதி) என்ற பெயரில் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தி வந்தது. இதனால் இந்த அமைப்பு நீதிக்கட்சி என்றே அழைக்கப்பட்டது. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ்ப் பத்திரிகை திராவிடன் ஆகும். மேலும் ஜஸ்டிஸ் கட்சி பல பொதுக்கூட்டங்கள், மாநாடு, சொற்பொழிவுகள் வாயிலாக பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை மக்களிடையே பரப்பியது அது போலவே ஜஸ்டிஸ் கட்சி மாவட்ட அமைப்புகளை உருவாக்கியது. மற்றும் பிராமணர் அல்லாத இளைஞர் அணியை தோற்றுவித்தது.

நீதிக்கட்சியின் ஆட்சி

மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று நீதிகட்சி ஆட்சிக்கு வந்தது. சென்னை சட்ட சபையில் 98ல் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பிட்டி தியாகராய செட்டி அமைச்சரவைக்கு தலைமையேற்க மறுத்துவிட்டதால் ஏ.சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1923 ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்ய கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. மீண்டும் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த நீதிக்கட்சி பனகல் அரசர் தலைமையீன்கீழ் அமைச்சரவையை அமைத்தது. 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியில் ஒற்றுமை குலைந்ததால், ஒட்டுமொத்த காங்கிரசை எதிர்த்து பெரும்பான்மை பெறமுடியவில்லை. எனவே, சுயேச்சை வேட்பாளர் ஏ. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை சுயராஜ்ய கட்சியின் ஆதரவுடன் பதவிக்கு வந்தது. 1930 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்றது. பி. முனுசாமி நாயுடு தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1932ல் பொப்பிலி அரசர் தலைமை அமைச்சரானார். 1934ல் இரண்டாவது முறையாக பொப்பிலி அரசர் அமைச்சரவைக்கு தலைமையேற்றார். 1937 ஆம் ஆண்டுவரை அவரது ஆட்சி தொடர்ந்தது.

நீதிக்கட்சியின் சாதனைகள்

மொத்தம் 13 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தது. சமூக நீதியும், சமூக சீர்திருத்தங்களுமே இந்த ஆட்சியின் சிறப்புகளாகும். அரசப் பணியிடங்களில் பிராமணர் அல்லாத சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி வழங்கியது. கல்வி சீர்திருத்தங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர்வதற்கு அது பாடுபட்டது.
நீதிக் கட்சி கல்வித்துறையில் பின்வரும் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியது :

1. கட்டணமில்லாத கட்டாயக் கல்வி முதன் முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

2. ஏறத்தாழ 3000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு மீன்வளத்துறையின் மூலமாக இலவச மீன் பிடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

3. சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் இலவச மத்திய உணவு அளிக்கப்பட்டது.

4. 1934ம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1935ல் துவக்க கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது.

5. பெண் கல்வி நீதிக் கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது.

6. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி தொழிலாளர் நலத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

7. ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.

மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டது. 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள், உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன.

1924 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே, 1929ல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக இத்தகைய அமைப்பு சென்னையில்தான் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீதிக்கட்சி பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தயது. தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக 1922ம் ஆண்டு சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பல புதிய தொழிற்சாலைகள் உருவாக காரணமாயின. உதாரணமாக சர்க்கரை தொழிற்சாலைகள், பொறியாளர் பணிகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், அலுமினியம், சிமெண்ட் தொழிற்சாலைகள், எண்ணெய் தொழிற்சாலைகள் உருவாயின. இந்த உதவிச்சட்டம், தொழிற்சாலைகளுக்கு நிலம், நீர்பாசன வசதிகள் வழங்க வழிவகை செய்தது.

அதுபோலவே நீதிக்கட்சி கிராமப்புற வளர்ச்சிக்காகவும், வேளாண் மக்களுக்கு உதவிட திட்டங்களை அறிமுகப்படுத்தியது. நோய்களை தடுக்க பொது சுகாதாரத் திட்டங்களை கொண்டு வந்தது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையில் நகர மேம்பாட்டு குழுவாயிலாக சென்னை மாநகராட்சி குடிசைகளை மாற்றி வீடு கட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சமுதாய நல நடிவடிக்கைகளாக நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரிசு நிலங்களை வழங்கியது. பெண்களை இழிவுபடுத்தும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயல்முறைகள் சீரமைக்கப்பட்டன. நீதிக் கட்சி ஆட்சியின்போதுதான், 1926ல் ஆந்திரப் பல்கலைக்கழகமும், 1929ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியின் முடிவு

1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் இந்திய அமைச்சர்களிடமே மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு என்ற நிலை தோன்றியது. இந்த தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராக கே.வி.ரெட்டி நாயுடுவும், காங்கிரஸ் தலைவராக சி.ராஜகோபாலாச்சாரியும் பொறுப்பு வகித்தனர். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டசபைக்கு 215 இடங்களில் 152 காங்கிரஸ் வெற்றிபெற்றது. சட்டமேலவையின் 46 இடங்களில் 26ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. 1937 ஜூலையில் சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. பல்வேறு சமூக முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை கொண்டுவந்த நீதிக்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1944 ஆம் ஆண்டு சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானங்கள்படி, "நீதிக்கட்சி", "திராவிடர் கழகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்