10-07-2018

முதல் இந்திய சுதந்திர போர் தென்னிந்தியாவில் தான் வேலூரில் தான் தோன்றியது!! அடக்குமுறையினை எதிர்த்து சிப்பாய்கள் புரட்சி செய்தது ஆங்கில ஆட்சிக்கு அதிர்ச்சியாக இருந்தது!! வேலூர் சிப்பாய் கலகத்தின் 212 வது புரட்சி தினம் வரலாற்றில் இன்று!!
வட இந்தியாவில் சிப்பாய் புரட்சி வெடித்தபிறகுதான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமானது என்பது வரலாறு கூறும் தகவல். ஆனால் அதற்கு முன்பே கிட்டத்தட்ட அதே காரணங்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்!

வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை!

வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் வாரிசுகளும், உறவினர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோட்டையை வெள்ளைக்கார சிப்பாய்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இந்தியச் சிப்பாய்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்.

இந்நிலையில், வெள்ளையரைப் போரில் வென்று மீண்டும் திப்புசுல்தானின் வாரிசுகளை மைசூர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர் திப்பு சுல்தான் குடும்பத்துக்கு விசுவாசமான முகம்மதியர்கள். அதனால் பக்கீர்களைப் போல வேடமிட்டு கிராமம் கிராமமாகச் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வந்தனர். விரைவில் பிரெஞ்சுப் படைகள் இந்தியா வரும், வெள்ளையர் ஆதிக்கம் மறைந்துவிடும் என்று நம்ம்பிக்கையூட்டினர்.

இந்தச் சமயத்தில்தான் சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக் என்பவர் சிப்பாய்களுக்கு புதிய தோல் தொப்பியை அறிமுகப்படுத்தினார். அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர்.
அத்துடன் வீரர்கள் நெற்றியில் விபூதி, நாமம் தரிக்கக் கூடாது, மீசையை ஒரே அளவாக வெட்டிக்கொள்ள வேண்டும், தாடி வளர்க்காமல் ஒட்ட மழிக்க வேணடும் என்றும் கூறப்பட்டது. இது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது. தங்களைக் கிறிஸ்துவ மதத்தில் மாற்றவே இந்த முயற்சிகள் என்று சிப்பாய்கள் கருதினர். திப்பு சுல்தானின் மகன்கள் படேல் ஹைதர், இளவரசர்கள் அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர். அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களைப் போல் வேடமிட்டு, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். திப்பு குடும்பப் பாதுகாவலராக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார்.

1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. சில அதிகாரிகள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர்.

பிறகு புரட்சியாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். வெடிமருந்து தயாரிப்புக் கிடங்கும் அவர்கள் வசமானது. கட்டாய தலைப்பாகையை அமுல்படுத்திய கர்னல் மிக்கிராஸும் சுட்டுக் கொல்லப்பட்டார். இளவரசர்களும் அவர்களது பணியாட்களும் புரட்சியாளர்களுக்கு இனிப்புகளையும் பானங்களையும் வழங்கினர். திப்புசுல்தானின் புலிக்கொடியை ஏற்ற, பொழுது புலர்ந்தது.

அந்தச் சமயத்தில் புரட்சியாளர்களும் இளவரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களும் கோட்டையிலிருந்த கஜானாவை உடைத்துக் கொள்ளையடிக்க முற்பட்டனர். இதில் புரட்சியாளர்களின் கவனம் சிதறியது. அதற்குள் சென்னையிலிருந்தும் வேறு ஊர்களிலிருந்தும் ஆங்கிலப் படைகள் வந்து கோட்டையை மீண்டும் கைப்பற்றியன. ஏராளமான புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புரட்சிப் படை வீரர்களோடு அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் வெள்ளை ஏகாதிபத்தியப் படை கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. 600 பேர் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றனர். வேலூர் புரட்சி வெடித்தபோது சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்கும் மாநில முதன்மை படை தளபதி சர்ஜான் ரடாக்கும் பதவியிலிருந்து பிரிட்டிஷ் அரசால் நீக்கப்பட்டனர். வேலூர் புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு சற்றேறக்குறைய அதே காரணங்களுக்காக வட இந்தியாவில் சிப்பாய் கலகம் மூண்டது.

நன்றி : தி இந்து (தமிழ்) & சகோதரி சொப்னா

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection