ஜி.யு.போப்


ஜி.யு.போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவில்  பிறந்தார்.

பெற்றோர் : ஜான் போப், கெதரின் யுளாப்

போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவச் சமயத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றிவந்தார்.  அவரைப்போன்று தாமும் சமயப்பணியாற்ற வேண்டும் என போப் விரும்பினார்.

போப் தம்முடைய பத்தொன்பதாம் வயதில் தமிழகத்தில் சமயப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பாய்மரக் கப்பலில் சென்னை வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின. எட்டு மாதங்களையும் வீணே கழிக்காமல், தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் படித்தார்.


தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப், பின்னர்த் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றத் தொடங்கினார். அங்கு பள்ளிகளை நிறுவினார். கல்விப்பணியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.

சமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.

கணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்) ஆகியவற்றைக் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் 1842 முதல் 1849 வரை பணியாற்றினார்.

1850ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டார்.

தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப்பணியாற்றத் தொடங்கினார்.

தஞ்சையில் பணியாற்றிய காலம் எட்டு ஆண்டுகள்

தஞ்சையில் பணியாற்றிய காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்.

திருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில், தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றிருந்தன.

போப், உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் அறுநூறு செய்யுள்களை, அறநூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து, ‘தமிழ்ச் செய்யுட்கலம்பகம்’ என்னும் நூலாகத் தொகுத்து அந்தப் பாக்களுக்கு விளக்கமும் தந்துள்ளார்.

போப், தமிழைக் கற்கும் காலத்திலேயே நூலாசிரியராகவும் விளங்கினார். பள்ளி குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் அமைந்த இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.  பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.

மேலை நாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில்  தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றையும் வெளியிட்டார்.

தமிழில் வரலாற்று நூல்களையும் எழுதினார்.

பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார்.

1858ஆம் ஆண்டில் உதகமண்டலம் சென்ற அவர்,  பள்ளி ஒன்றைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தாயகத்துக்குச் சென்ற போப், 1885 முதல் 1908ஆம் ஆண்டுவரை 23 ஆண்டுகளாக இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886ஆம் ஆண்டு வெளியிட்டார்.

தமது 80ஆம் வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.

தம் இறுதிக்காலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.

1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினொன்றாம் நாள் போப் தம் இன்னுயிரை நீத்தார்.

அவர், தம் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என எழுத வேண்டுமென்று தமது இறுதிமுறியில் (உயில்) எழுதி வைத்தார்.


(இக்குறிப்புகள் எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. )
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection