ad

பொதுத்தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ என்ற தலைப்பின்கீழ் சுமார் 30 கேள்விகள் வரை கேட்கப்படும். கொஞ்சம் கவனமாக புரிந்து கொண்டால் இப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறமுடியும். 

‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ பகுதியில் மொத்தம் 20 தலைப்புகள் உண்டு. அத்தலைப்புகளையும், அவற்றில் கேள்விகள் அமையும் விதத்தையும் உதாரணங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். இப்பிரிவைப் பொறுத்தவரை பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி ஆகியோரின் முக்கியப் படைப்புக்களை நன்கு படிக்க வேண்டும். இவற்றில் 4 கேள்விகள் வரை  கேட்கப்படும்.

உதாரணம்:

1. ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ - என்று பாரதியாரைப் பாராட்டியவர்? - கவிமணி
2. பகவத்கீதையைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர்? - பாரதியார்
3. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? - பாரதியார்
4. பாரதிதாசன் நடத்திய இதழ்கள் எவை? - குயில், பொன்னி
5. பாரதிதாசன் பாடல்கள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? - செக் மொழியில்
6. ‘கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி’ என்று தமிழ்க்காதல் கொண்டு விளங்கிய புலவர் யார்? - பாரதிதாசன்
7. ‘தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ்’ என்று பாராட்டப் பெற்றவர் யார்? - பாரதிதாசன்

2.புதுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை     கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள் இப்பிரிவில் மேற்கண்ட கவிஞர்கள் பற்றி 4 கேள்விகள் கேட்கப்படலாம்.

உதாரணம்:

1. ‘சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே, இந்தத் தேசமெல்லாம் செழித்திடுது’ எனப் பாடியவர்? - மருதகாசி
2. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
 A) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி, B) இராஜ தண்டனை, C) மாங்கனி. D) கொய்யாக்கனி (விடை-D)
3. ‘ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்  மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்’ என்று பாடியவர் யார்? - முடியரசன்
4. ‘கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும்’ என்று பாடியவர்? - சுரதா


3.புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பான தொடர்கள் மற்றும் நூல்கள். இப்பிரிவில் 10 கேள்விகள் வரை கேட்கப்படும்.

உதாரணம்:

1. ‘சரசாவின் பொம்மை’ என்ற சிறுகதையை எழுதிய கவிஞர் யார்? - செல்லப்பா
2. கலைமகள் பரிசு பெற்ற ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை நூல் எது? - முள்ளும் ரோஜாவும்
3. தமிழில் வந்த முதல் கவிதைத் தொகுதி எது? - புதுக்குரல்கள்
4. புதுக்கவிதையின் வளர்ச்சிக் காலத்தில் ‘செல்வாக்கு காலம்’ எனப்படும் காலத்துடன் தொடர்புடையது எது? - வானம்பாடி பரம்பரை
5. வால்ட் விட்மன் எழுதிய புதுக்கவிதை நூலின் பெயர் என்ன? - புல்லின் இதழ்கள்
6. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்? - தருமு.சிவராமு
7. ‘பிரமிள்’ என்ற புனைபெயர் கொண்ட கவிஞர் யார்? - தருமு சிவராமு

4. கடிதங்கள்- நாட்குறிப்பு, நேரு, காந்தி, மு.வ., அண்ணா, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்
இந்தப் பிரிவில் ஆனந்தரங்கம் பிள்ளை  நாட்குறிப்பு மிக முக்கியப் பகுதி. காந்தி, மு.வ., அண்ணா கடித  தலைப்புக்களிலும் ஒரு கேள்விகள் கேட்கப்படும்.

உதாரணம்:

1. இந்தியாவின் ‘பெப்பிசு’ என அழைக்கப்படுபவர் - ஆனந்தரங்கர்
2. ‘தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து’ எனக் கூறியவர் - மு.வரதராசனார்
3. ‘தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச்  சித்திரகுப்தனைப்போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளவர்’ என  ஆனந்தரங்கனைப் பாராட்டியவர் - வ.வே.சு.
4. ‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்? - நாட்குறிப்பு
5. நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர்-பொருத்துதல்
7. கலைகள், சிற்பம், ஓவியம், பேச்சு, திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
9. உரைநடை- மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், நா.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க.,     வையாபுரிப்பிள்ளை மொழிநடை தொடர்பான செய்திகள்
10. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலங்குவனார் ஆகியோரின் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
11. தேவநேயப்பாவாணர், அகர முதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்தொண்டு தொடர்பான செய்திகள்
12. ஜி.யு.போப்-வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
13. பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர், காமராசர் ஆகியோரின் சமுதாயத்தொண்டு
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம், மாற்றம் பற்றிய செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பு, பெருமை, தமிழ்ப்பணி
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்
17. தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னிபெசண்ட் அம்மையார், மூவாலூர்  ராமாமிர்தத்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, விடுதலை போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
18. தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வு,கடற்பயணங்கள்
19. உணவே மருந்து- நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20. சமயப்பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.க., தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்

5-வது தலைப்பிலிருந்து 20-வது தலைப்புகள் வரையிலான பகுதிகளில் ஒவ்வொரு தலைப்பில் இருந்தும் 1 அல்லது 2 கேள்விகள் கேட்கப்படும்.

உதாரணம்:

1. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர்? - பம்மல் சம்பந்தனார்
2. நாடகக் கலைக்கு மற்றொரு பெயர்?- கூத்துக்கலை
3. ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதையின் ஆசிரியர்? - ஜெயகாந்தன்
4. ‘வரதராசனார்’ என்ற நூலின் ஆசிரியர்? - ஆலந்தூர் மோகனரங்கன்
5. முதுமக்கள் தாழிகள் மிகுதியாகக் கிடைத்த இடம்? - ஆதிச்சநல்லூர்
6. வீரத்தை ஆடவரின் முதற்கடமையாகக் கூறும் நூல்? - புறநானூறு

7. ``The Ocean of Wisdom” என்ற ஆங்கில இதழின் ஆசிரியர்? - மறைமலையடிகள்
8. ஆறுமுக நாவலரை, ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டியவர்? - பரிதிமாற் கலைஞர்
9. உ.வே.சா.வின் ஆசிரியர் யார்? - மீனாட்சி சுந்தரனார்
10. உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் எது? - வேணுலிங்க விலாசச் சிறப்பு
11. ‘பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி. அதுவே
நம் தமிழ்மொழி’ எனக் கூறியவர்? - பாவாணர்.
12. ‘தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்’ என்று கூறியவர்? - தேவநேயப் பாவாணர்.
13. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்? - ரா.பி.சேதுப்பிள்ளை
14. ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என்று எடுத்துரைத்தவர்... - முத்துராமலிங்க தேவர்
15. தற்காலத்தில் மதுரை என அழைக்கப்படும் ஊர் பழங்காலக் கல்வெட்டுகளில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - மதிரை
16. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளின் எண்ணிக்கை? - ஏறத்தாழ 154
17. எக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது? - சனி
18. உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய முதல் நூல்? - திருக்குறள்
19. கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர்?- இராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை
20. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு? - தென்னாப்பிரிக்கா
21. ‘சரசுவதி’ என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்? - வல்லாரைக்கீரை
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களில் மேற்கண்ட 20 தலைப்புகள் பற்றி வரும் செய்திகள் அனைத்தையும் முழுதாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அது தவிர, இத்தலைப்புகளில் வெளிவந்துள்ள தனித்தனிப் புத்தகங்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும் படிக்க வேண்டும். திட்டமிட்டு முயற்சித்தால் பகுதி. இ-யில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது எளிது.

Post a Comment

0 Comments