அவமானமே வெற்றிக்கு உரம் !

நாளைய சாதனையர்களுக்குச் சமர்ப்பணம்....
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அவரது சுய சரிதையைக் கூறும் படமான "எம்.எஸ். தோனி-தி-அன் டோல்டு ஸ்டோரி" என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்தது. அதில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்த தோனி முக்கியமாகக் கூறியது 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்வி பற்றித்தான்.
அவர் கூறியதைக் கேளுங்கள்:
2007 ம் ஆண்டு மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியான தோல்வியின் காரணமாக முதல் சுற்றுடன் போட்டியில் இருந்து வெளியேறியது. எனக்கு அதுதான் முதல் உலக கோப்பைத் தொடர். அந்த மிகப் பெரிய தோல்விக்குப் பின் டெல்லியில் வந்து இறங்கியபோது ஏகப்பட்ட ஊடகங்கள் குவிந்து இருந்தன. அன்று நாங்கள் விமான நிலையத்தில் இறங்கி போலீஸ் வேனில் ஏறினோம். என் அருகே சேவாக் அமர்ந்து இருந்தார். அந்த மாலைப் பொழுதில் எங்களை ஏற்றிச் சென்ற வேன் 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.

எங்களை சுற்றி ஊடக வாகனங்கள் கேமராக்களுடன் வந்தன. நாங்கள் ஏதோ பெரிய குற்றமிழைத்து விட்டு போலீஸ் வேனில் சென்றது போன்று இருந்தது. அதாவது ஒரு கொலையாளி அல்லது பயங்கரவாதி என்பது போன்று. உண்மையில் ஊடகங்களால் நாங்கள் அன்று விரட்டப் பட்டோம். பிறகு எங்களை காவல்நிலையத்தில் சிறிது நேரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து இருந்தனர். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பின்னர் 15-20 நிமிடங்களுக்குப் பின்னர் எங்கள் கார்களில் புறப்பட்டு வீடுகளை சென்று அடைந்தோம்.

இதுதான் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாகவும், சிறந்த கேப்டனாகவும், சிறந்த மனிதனாகவும், நான் என்னை வடிவமைத்துக் கொள்ள உதவியது.
-- இவ்வாறு கூறி உள்ளார்.
இந்த அளவு அவமானத்தையும், வலியையும் அறிந்த தோனி 2011 ம் ஆண்டு நடந்த அடுத்த உலகக் கோப்பையில் ஒரு தலை சிறந்த தலைவராகவும், வீரராகவும் செயல்பட்டு சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

இந்த உலகில் அவமானம், வலி இல்லாத மனிதனே கிடையாது. கவிஞர் வைரமுத்து கூறுவார், "குடலில் ஒரு அவுன்சு மலமும், மூளையில் ஒரு அவுன்சு அவமானமும் இல்லாத மனிதன் இந்த உலகிலேயே இல்லை" என்று. எப்பேற்பட்ட மாமனிதராக இருந்தாலும் அவரும் ஒரு நாள் அவமானத்தை சந்தித்தவராகவே இருக்கிறார்.

அவமானத்தைக் கண்டு துவண்டு போகிறவர்கள் சாதாரண மனிதர்கள், அதனை தங்கள் வெற்றிக்கு உரமாக பயன்படுத்துகிறவர்கள் சாதனையாளர்கள்.
எனவே "வேலை இல்லை, வெட்டி தானே நீ, சரியான தெண்டம், எவ்வளவு நாள்தான் படிச்சுக்கிட்டு இருப்ப, எப்போதான் நீ பாஸ் பண்ணுவ" போன்ற உங்களது அவமானங்களை உங்களது வெற்றிக்கு உரமாக்கிக் கொள்ளுங்கள்.
அவமானங்களை ஒரு போதும் தலைக்கு கொண்டு செல்லாதீர்கள், அவ்வாறு கொண்டு சென்றால் உங்களால் ஒரு வேலையும் செய்ய முடியாது. உங்கள் காலடியிலேயே வைத்து விடுங்கள்.

ஏனென்றால், ஒரு செடிக்கோ அல்லது மரத்திற்கோ உரம் தேவைப்படுவது வேரின் அடியில் தானே தவிர கிளையின் நுனியில் அல்ல.

உங்கள் அவமானங்களை உரமாக்கி, உங்கள் கண்ணீர்த் துளிகளை நீராக்கி உங்கள் முயற்சி என்னும் செடியினை வளருங்கள், வெற்றிப் பூ தன்னால் பூக்கும்.

அன்புடன் அஜி,
சென்னை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்