மொரார்ஜி தேசாய் பற்றிய அரிய முத்துக்கள் பத்து

* சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். 

* மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 

* பம்பாய் மாகாண முதல்வராக 1952-ல் பொறுப்பேற்றார். ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று மத்திய அரசில் வணிகம், தொழில் துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். இந்திரா காந்தியின் ஆட்சியில் துணை பிரதமராகப் பணியாற்றினார். 

* காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். 1975-ல் அவசர நிலையை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையை ஏற்று ஜனதா கட்சியில் இணைந்தார். 
* நாட்டின் 4-வது பிரதமராக 1977-ல் பொறுப்பேற்றார். ஜனநாயகத்தை நிலைநாட்ட முழு முயற்சி மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு, தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டினார். 

* விவசாயத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நிலவரிக் குறைப்பு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வகைசெய்து, நல்ல விலை கிடைக்கச்செய்தார். கட்டாய வேலைவாய்ப்பு மூலம் கிராமங்களில் சாலை போடுதல், பாசன வசதி போன்ற பணிகள் செய்யப்பட்டன. இதில் பணியாற்றிய மக்களுக்கு சம்பளத்துக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
* ‘ஜனதா’ சாப்பாடு திட்டம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைத்தது. தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார நிலையை சீரமைத்தார். உள்நாட்டு சிறு தொழில், வணிகத் துறைகளை ஊக்கப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டினார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியது இவரது மாபெரும் சாதனை. 
* சில அரசியல் விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால் இரண்டே ஆண்டுகளில் இவரது அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலகினார். தனது சித்தாந்தங்கள், கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர். 

* இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ இவருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் இதற்கு இணையாக கருதப்படும் ‘நிஷான் இ பாகிஸ்தானி’ விருதும் பெற்றவர். இந்த 2 விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டுமே. பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையுடன் செயல்பட்ட கறைபடாத அரசியல் தலைவரான மொரார்ஜி தேசாய் 99-வது வயதில் (1995) மறைந்தார். 
நன்றி : தி இந்து (தமிழ்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்