இறைச்சி - தமிழ் இலக்கணம்

இறைச்சிப் பொருள்
இறைச்சி என்றால் என்ன?
இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. ‘தங்குதல்’ என்னும் பொருள் உடையது. கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது.


உள்ளுறையைப் போலவே இறைச்சிக்கும் கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனை

கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே (240) என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார்.

சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சி என்றும் அறிஞர் விளக்கம் கூறுவர்.

உதாரணம்:

    அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்
    பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
    தம்இல் தமதுண் டன்ன சினைதொறும்
    தீம்பழம் தூங்கும் பலவின்
    ஓங்குமலை நாடனை வரும்என் றோளே

(குறுந்தொகை, 83)

விளக்கம்:

இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து:

இனிமை தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது.

தோழி உணர்த்த விரும்பும் கருத்து:

உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன் என்பது,

தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது.

உள்ளுறை - இறைச்சி : ஒற்றுமையும் வேற்றுமையும்

உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் வேறு சில நுட்பமான வேறுபாடுகளையும் உடையவை.

ஒற்றுமை:

1) இரண்டும் குறிப்பால் அறியப்படுவன.

2) இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன.

3) இரண்டும் அகப்பாடலுக்கே உரியன.

வேற்றுமை:

1) உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும்.

2) இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர் மறையாகவும் முடியலாம். சொற்பொருள் - அதற்கு இணையான குறிப்புப் பொருள் என்னும் இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படுவது இறைச்சியின் தனிப்பண்பாகும்.

புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம், புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி.

நன்றி : தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

கருத்துரையிடுக

0 கருத்துகள்