அறநூல்கள் : வெற்றிவேற்கை



ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்

இவர் இயற்றிய பிறநூல்கள்: நைடதம், காசிகாண்டம், கூர்மபுராணம், மகாபுராணம்
வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை’ என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.
இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப்படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை’ என்று அழைக்கப்படுகிறது.

வெற்றி வேற்கை வீரராமன்
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே
(ஆளி = ஆட்சி செய்பவன், களைவோர் = போக்குவோர், புகல் = உரைத்த)

என்னும் நூல்பயன் பாடலில் இடம் பெற்றுள்ள ‘வெற்றிவேற்கை’ என்பதே நூலின் தலைப்பு ஆகிவிட்டது. இங்கே வெற்றி வேற்கை என்பது அதிவீரராம பாண்டியனுக்கு அடைமொழியாக வந்துள்ளது. வெற்றிதரும் வேலைக் கையில் ஏந்திய வீரராமன் என்பது இதன் பொருள். இந்தப் பாடலின் மூலம், அதிவீரராம பாண்டியன் கொற்கையை ஆட்சி செய்தவன் என்பதையும் குலசேகரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
வெற்றி வேற்கையின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப்பட்டுள்ளார்.

உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் விட, கல்வியே சிறந்தது. கல்வியின் சிறப்பை உணர்த்தும் பல தொடர்களை வெற்றி வேற்கை தெரிவித்துள்ளது.
ஓரடி முதல் ஐந்தடி வரையிலான பாக்கள் இடம் பெற்றுள்ளன.

கல்வி கற்றவர்கள் பிறரால் மதிக்கப்படுவார்கள். கல்வி கல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை. கல்வி கல்லாதவர்கள் செல்வத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் உலகம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதை வெற்றிவேற்கை தெரிவித்துள்ளது.

கடவுள் வாழ்த்து நூற்பலன், இறுதியில் உள்ள வாழ்த்து என்ற மூன்றும் நீங்கலாக மொத்தம் 82 பாடல்கள் உள்ளன.

இந்நூலில் இடம்பெறும் சில முக்கிய பாடல்வரிகள்

“கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்’’

“எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்’’
“செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்’’

“மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை’’

“கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே’’

“நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே’’

“எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர்’’

“பொய்உடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும் மே’’

“மெய்யுடை ஒருவன்சொலமாட் டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே’’

“கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே’’

கருத்துரையிடுக

0 கருத்துகள்