மாநில நிர்வாகம் - ஆளுநர்


மாநில
அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். இவர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். அவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். எனினும் பதவிக்காலம் முடியும் முன்பாகவே அவரை அப்பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் நீக்கலாம். அல்லது தானாகவே தனது பதவியை ஆளுநர் ராஜினாமா செய்யலாம். ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்படலாம். ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்க இயலாது.

மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் அவர் பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இது தவிர ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் அவர் வகித்தல் கூடாது.


அதிகாரம் மற்றும் பணிகள்

ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் உள்ளன.

மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனை யின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.

ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசு தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

மாநில சட்ட மன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சட்ட மன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.

ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பணமசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டுவர முடியும். சட்டமன்ற கூட்டம் நடைபெறாதபோது ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்.

சட்ட மன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை அவர்கள் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெறாதபோது நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார் .

மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை , சமூக சேவை , கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.

மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்ட மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதா உள்ளிட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறார்.

மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.


ஆளுநரின்
நிலை

மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார். எனினும் மாநில ஆளுநர் எப்போதும் பெயரளவு தலைவராக இருப்பது இல்லை. அவர் தனது அதிகாரங்களை குறிப்பிட்ட சில நேர்வுகளில் செயல்படுத்துகிறார்.

ஆளுநர் மத்திய அரசின் ஒரு முகவராக மாநிலத்தில் செயல்படுகிறார். எனவே இவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.

ஆளுநர் முக்கியமான தருணங்களில் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குகிறார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவிக்கிறார். ஆளுநர் விருப்புரிமை அதிகாரத்தை செயல்படுத்தும் போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார்.

அவர் அமைச்சரவையிடமிருந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கோரிப் பெறலாம்.

குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சசரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார். மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிக்கிறார். பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்