ஆசியஜோதி

ஆறாம் வகுப்பு புதிய தமிழ் பாடபுத்தகத்திலிருந்து - ஆசியஜோதி  



  • ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)  என்னும் நூலைத் தழுவி, கவிமணி தேசிக விநாயகனாரால் எழுதப்பட்டது.
  • இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

பாடல்
நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன்
    நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
துன்று கருணை நிறைந்த வள்ளல் - அங்கு
    சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!

வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த
    மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!

யாரும் விரும்புவது இன்னுயிராம் - அவர்
    என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்
    பாடு முழுதும் அறிந்திலீரோ?

நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த
    நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே - வயல்
    பக்குவ மாவது அறிந்திலீரோ?

காட்டும் கருணை உடையவரே - என்றும்
    கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த
மர்மம் அறியாத மூடரையா!

காடு மலையெலாம் மேய்ந்துவந்து - ஆடுதன்
    கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் - ஒரு
    தீய செயலென எண்ணினீரோ?

அம்புவி மீதில்இவ் ஆடுகளும் - உம்மை
    அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
    நன்மை உமக்கு வருமோ ஐயா?

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை
    ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச்
    செல்வது ஒருநாளும் இல்லைஐயா!

ஆதலால் தீவினை செய்யவேண்டா - ஏழை
    ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
    புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!

- கவிமணி தேசிக விநாயகனார்



சொல்லும் பொருளும்:

நீள்நிலம்    -     பரந்த உலகம்
முற்றும்    -    முழுவதும்
வீழும்    -    விழும்
மாரி     -    மழை
பார்    -    உலகம்
கும்பி     -    வயிறு
பூதலம்    -    பூமி

ஆசிரியர் குறிப்பு

  • தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
  • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்