நடிகர் ரகுவரன் தந்த புத்துணர்ச்சி

 அஜியின் இனிமையான மற்றும் சுவாரஸ்யமான மலரும் நினைவு


 எனது அரசு வேலை கனவிற்கு தூண்டுகோலாக இருந்தவன் என் நண்பன் பழனிவேல். (இவனைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்), அவன் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த காவலர் துறைக்கான இளநிலையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றான், பின்னர் என்னை நீயும் படி, எளிதாக தேர்ச்சி பெற்று விடுவாய் என தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பான். அப்பொழுது தனியார் துறையில் இருந்த எனக்கு அரசு வேலை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. அதன் மேல் எந்த வித ஈடுபாடும் இல்லை.


பின்னர், சரி நம் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறானே, எத்தனை வருடம்தான் தனியார் துறை ஊழியராக இருப்பது, ஒரு மாற்றத்திற்கு நாமும் தயாராவோம் என்று 2007 ம் ஆண்டின் இறுதியில் படிக்கத் தொடங்கினேன்.
 
அப்பொழுது வினா முறை, ரொம்ப எளிதாக இருக்கும், தமிழில் எல்லாம் ஒரு பதினைந்து நாள் படித்தாலே எளிதாக 96 வரை போட்டு விடலாம். அந்த கால கட்டத்தில், இப்போது போன்று தொடர்ச்சியான எந்த தேர்வு அறிவிப்பும் இல்லை. எனவே நான், தமிழ் தேர்வு அறிவிப்பு வந்த உடன் படித்துக் கொள்ளலாம், தற்போது பொது பாடத்தில் கவனம் செலுத்தி அதில் இருந்து படிக்க ஆரம்பிக்கலாம் என்று படிக்கத் தொடங்கினேன்.

சரியாக இரு மாதங்கள் தான் படித்தேன், பின்னர் என் மனைவி கருவுற்றிக்கிறேன் என்று சொன்னதால் அப்படியே புத்தகத்தை தூக்கி பரணில் போட்டு விட்டேன். ஏனென்றால், எங்களுக்கு திருமணம் முடிந்து, ஐந்து வருடம் வரை குழந்தை இல்லாமல் இருந்தது. மனைவி மற்றும் குழந்தைக்கே முன்னுரிமை. சென்னையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததால் கர்ப்பிணியான அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பிலும், மகிழ்ச்சியிலும் என்னால் படிக்க முடியவில்லை.

ஆனால், அந்த இரண்டு மாதங்களும், பணி புரிந்து கொண்டே கிடைத்த நேரங்களில் படிப்பேன், விடுமுறை நாட்கள், பயணம், இப்படி கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் கூட வீணடிக்காமல் படித்து வந்தேன்.

எனது சொந்த ஊர் குற்றாலம் என்பதால், தாய் தந்தையரை பார்க்க சென்னையிலிருந்து ஊருக்கு மூன்று மாத இடைவெளியில் செல்வேன். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முழு இரவு கிடைக்கும், அந்த நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டேன், ரயில் கிளம்பி ஒரு 10 மணி அளவில் அனைவரும் தூங்க அவரவர் படுக்கைக்கு சென்று விடுவார்கள்.

நான் கோச் க்கு வெளியே முகம் கழுவுவதற்கு வாஷ் பேசின் மற்றும் கண்ணாடி இருக்குமல்லவா? அந்த இடத்தில பாடக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். ஆனால் ஒன்றை மற்றும் நினைவு கொள்ளுங்கள், இவ்வாறு அசாதாரண சூழ்நிலையில் புதிய பாடங்களை படிக்கக் கூடாது, ஏற்கனவே படித்து வைத்து இருக்கும் பாடங்களை திருப்புதல் செய்ய இது போன்ற நேரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு ரயிலில் படிப்பது, எனக்கு அதுதான் முதல் முறை, நான் ரொம்ப ஆர்வமாக குறிப்புகளை பார்த்துக் கொண்டே வந்தேன், யார் யாரோ கடந்து போனார்கள், சிலர் நான் என்ன படித்துக் கொண்டு இருக்கிறேன்? என்று பின்னால் இருந்து குறிப்புகளை பார்த்தார்கள், நான் யாரையும் கவனிக்க வில்லை.

மணி அதிகாலை 3.00 இருக்கும், அப்போது, என் தோளை ஒரு கை பற்றியது, யார் என்று நிமிர்ந்து பார்த்தல் அங்கு நடிகர் ரகுவரன் நின்று கொண்டிருந்தார். எனக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சி. எழுந்து அவரைப் பார்த்து புன்னகைத்து, வணக்கம் என்றேன்.

அவரும், "என்ன இந்த நேரத்துல, ரயில் ல இப்படி பாத்ரூம் பக்கம்ன்னு கூடப் பார்க்காம படிச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு" கேட்டார்.
 
நான் சிரித்துக் கொண்டு, ஒன்னும் இல்லை சார், சும்மா TNPSC க்கு தான் படிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னேன்.
 
அவர்," ஓ! கவெர்மென்ட் ஜாப்புக்கா" ன்னு கேட்டார், நானும் "ஆமாம் சார்" ன்னு சொன்னேன்.

அப்பொழுது அவர் சொன்னார், "நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் கோயம்பத்தூர் தான், கல்லாரியில் படிக்கும் போது நடிகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அந்த எண்ணம் ஏன் என்னுள் வந்தது என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் அந்த எண்ணம் வந்ததில் இருந்து என்னை முழுவதுமாக ஆட்கொண்டு இருந்தது. நான் சாப்பிடுறப்போ, தூங்குறப்போ ன்னு என் மனம் முழுவதும் நான் நடிகன் ஆக வேண்டும் என்ற நினைவே இருந்தது".

"அந்த நினைவு தான் சென்னைக்கு அழைத்து வந்தது, சென்னை வந்த பின் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்-ல் சேர்ந்து படிக்கச் சொன்னது. அப்புறம், நான் நடிகன் ஆனா பிறகுதான், கொஞ்சம் அந்த எண்ண ஓட்டத்திலுருந்து ஓய்வைப் பெற்றேன். அது வரை அந்த நடிகன் என்கிற கனவு மற்றும் நினைவு என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது."

நீங்கள் இந்த நேரத்திலும், அர்ப்பணிப்பாக படிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கும் அந்த கனவு - நினைவு துரத்தல் இருக்கும், அது இருந்தால்தான் நம்மால் முழு அர்ப்பணிப்புடன் அந்தக் கனவினை நோக்கி பயணப்பட்டு வெற்றி பெற முடியும். எனவே நீங்களும், வெற்றி பெறுவீர்கள் என்றார்.
 
உண்மையில் திரு. ரகுவரன் சொன்னவுடன், எனக்கு வேலை வாங்கி விட்டதைப் போன்ற மகிழ்ச்சி. ஏன்னென்றால், உண்மையில் எனக்கும் அந்த எண்ண ஓட்டம் இருந்தது.
 
அதன் பின்னர், நான் மேற்சொல்லியவாறு புத்தகத்தை மனைவி-குழந்தைக்காக பரணில் போட்டு விட்டேன். ஆனாலும், அந்த துரத்தல் என்னுள் இருந்து கொண்டே வந்தது. பின்னர், 2014 ம் ஆண்டு மத்தியில் மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

அப்போதும் நான் தனியார் துறை ஊழியர் தான், ஆனால் இந்த முறை எக்காரணம் கொண்டும் ஏதேனும் ஒரு வேலை வாங்கி விட்டு தான் புத்தகத்தை கீழே வைக்க வேண்டும், என்ற சவால் எனக்குள்ளேயே விடுத்துக் கொண்டேன். 2016- ல் முடித்தேன்.

ரகுவரன் அவர்கள் என்னிடம் சொன்னதையே தான் உங்களுக்கும், சொல்கிறேன். நீங்கள் உண்ணும் போதும், உறங்கும் போதும், மற்ற எந்த வேலை செய்யும்போதும் -- உங்களுக்குள், உங்களை ஏதேனும் ஒரு கனவு துரத்திக் கொண்டு இருக்கிறதா? கண்டிப்பாக அது நடக்கும்.

அது படிப்பு - அரசு வேலை என்று இல்லை, வியாபாரம், சுற்றுலா, பயணம், கல்யாணம், விளையாட்டு வீரர் ஆக வேண்டும், இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது, நம்பிக்கையுடன் கூடிய முயற்சி மட்டுமே.

நன்றி.

அன்புள்ள
அஜி
சென்னை

கருத்துரையிடுக

0 கருத்துகள்