காற்றே வா! - பாரதியார் வசன கவிதை

10th Tamil காற்றே வா! - பாரதியார் வசன கவிதை 
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்

காற்றே, வா.

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;

இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த

பின் ப்ராண- ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

காற்றே, வா.

எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு 

நன்றாக வீசு.


சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்.

                                       - பாரதியார் கவிதைகள்

சொல்லும் பொருளும்:

  • மயலுறுத்து - மயங்கச்செய்
  • ப்ராண - ரஸம் - உயிர்வளி
  • லயத்துடன் - சீராக

நூல் வெளி

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை', 'பாட்டுக்கொரு புலவன்' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்.

எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்.

கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.

குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.

இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். 

இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

வசனகவிதை

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. 
  • ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். 
  • இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று..

"திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்

சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு

தக்கை யடிக்குது காற்று - தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட" 

                                                        - பாரதியார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்