காளமேகப்புலவர்

வாழ்க்கை குறிப்பு:

இயற் பெயர் - வரதன்

பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள 'நந்திக்கிராமம்' எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள 'எண்ணாயிரம்' எனவும் கூறுவர்.

பெயர் காரணம்:

“கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார்.

கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் 'இம்' என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.

சிறப்பு:  சிலேடை, வசைப்பாடுவதில் வல்லவர்

சிறப்பு பெயர்:

  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி

படைப்புகள்:

  • திருவானைக்கா உலா
  • திருவானைக்கா சரஸ்வதி மாலை
  • சமுத்திரவிலாசம்
  • சித்திரமடல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • வினோத ரசமஞ்சரி
  • தமிழ் நாவலர் சரிதை
  • புலவர் புராணம்
  • தனிச்செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை
  • கடல் விலாசம்

குறிப்பு:

  • இவர் வைணவராக இருந்து சைவராக மாறினார்.
  • திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு 'எமகண்டம்' பாடி அவரை வென்றவர்.
  • திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
  • வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
  • இவர் மறைந்த இடம் - திருவானைக்கா
  • திருவானைக்கா கோயில் தாசியான மோகனாங்கியால் சைவரானார்

 
கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)

தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் 'சிலேடை' என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம்.
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் 
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் 
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் 
ஏறப் பரியாகு மே
                                        - காளமேகப்புலவர்

சொல்லும் பொருளும்
வண்கீரை - வளமான கீரை
முட்டப்போய் - முழுதாகச் சென்று
மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்),
                       எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
பரி - குதிரை
கால் - வாய்க்கால், குதிரையின் கால்

பாடலின் பொருள்
கீரைப்பாத்தியில்
மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்; மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை
வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்