இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 79 முதல் 122 வரை பாராளுமன்றத்தின் அமைப்பு, ஒன்று சேர்த்தல், பணிக்காலம், அலுவலர்கள், கோட்பாடுகள், சிறப்புரிமைகள், அதிகாரம் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. இது பகுதி – V ல் அமைந்துள்ளது.
அரசியலமைப்பின்படி பாராளுமன்றமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. குடியரசுத்தலைவர்
2. மக்களவை
3. மாநிலங்களவை
குடியரசுத்தலைவர்
குடியரசுத்தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாவார். ஏனெனில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அது சட்டமாகும்.
குடியரசுத் தலைவரின் பாராளுமன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இரு அவைகளையும் கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது, மக்களவையை கலைப்பது, இரு அவைகளிலும் உரையாற்றுவது மற்றும் அவைகள் கூடாதபோது அவசரச் சட்டங்களை பிறப்பிப்பது போன்றவை அடங்கும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையும் ஒருங்கிணைந்து பாராளுமன்றமாக செயல்படுகிறது.
மாநிலங்களவை
அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை – 250
தற்போதைய எண்ணிக்கை – 245
மாநிலங்கள் – 29
யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 4
நியமன உறுப்பினர்கள் – 12
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஷரத்து 80(3)ன்படி குடியரசுத் தலைவர் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பான அறிவும் அனுபவமும் கொண்ட 12 உறுப்பினர்களை நியமிக்கின்றார் என்று ஷரத்து 80(3) கூறுகிறது.
7 யூனியன் பிரதேசங்களில் இரண்டில் மட்டும் (டெல்லி மற்றும் பாண்டிச்சேரி) மாநிலங்களவைக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. இதர 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகை மிக குறைவாக இருப்பதால் அவற்றிற்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
மக்களவை (ஷரத்து 81)
அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 550 + 2 = 552.
இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஷரத்து 331-ன் படி ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சார்ந்த 2 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
மக்களவை தேர்தல் முறை
மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களில் மற்றும் யூனியன் பகுதிகளில் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட தொகுதிகளில் உள்ள 18-வயது பூர்த்தியான குடிமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அறுபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு சீர்த்திருத்தச் சட்டம் 1988 வயது வந்தோர் வாக்குரிமையை 21ல் இருந்து 18ஆக குறைத்தது.
உறுப்பினராவதற்கான தகுதிகள்
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினர் ஆவதற்குரிய தகுதிகளை ஷரத்து 83 கூறுகிறது.
ஒரு நபர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
மாநிலங்களவைக்கு உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிறைந்தவராகவும், மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட 25 வயது நிறைந்தவராகவும் இருக்க வேண்டும்.
மக்களவை சபாநாயகர்
அரசியலமைப்பின் ஷரத்து 93-ன் படி மக்களவைக்கு சபாநாயகர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் மக்களவை உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அவரது இடம் காலியானால் உடனடியாக வேறொரு உறுப்பினரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதியை குடியரசுத்தலைவர் அறிவிப்பார்.
பொதுவாக சபாநாயகரின் பதவி மக்களவை பதவிகாலம் முடியும் வரை தொடரும். எனினும் அவரது பதவி காலியாவதற்கான சில காரணங்கள் உள்ளன.
சபாநாயகரே பதவி விலக விரும்பி துணை சபாநாயருக்கு பதவி விலகல் கடிதத்தை அளித்தல்.
மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்தல், போன்ற காரணங்களாலும் பதவி காலியாகும்.
சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும்போது, 14 நாளுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும். பதவி நீக்க தீர்மானம் மக்களவையில் கொண்டுவரும் போது அவை நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்க முடியாது.
ஆனால் அவை உறுப்பினராக அவையின் நடவடிக்கைகளில் பங்கு பெறலாம். எப்போதெல்லாம் மக்களவை கலைக்கப்படுகிறதோ அப்போது சபாநாயகர் பதவி காலியாகாது. அடுத்த பொதுத்தேர்தல் நடந்து புதிய அரசாங்கத்தின் சபாநாயகர் பதவியேற்கும் வரை அவரது பதவி தொடரும்.
சபாநாயகரின் பங்கு, அதிகாரம் மற்றும் பணிகள்
மக்களவையின் தலைவராகவும் அதன் பிரதிநிதியாகவும் திகழ்கிறார்.
மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள், ஒட்டுமொத்த அவை மற்றும் அதன் குழுக்கள் அனைத்திற்கும் பாதுகாவலராக திகழ்கிறார்.
அவையின் பொறுப்பாளரான சபாநாயகருக்கு உயர்ந்த மரியாதையும், கௌவரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் சபாநாயகர் மூன்றுவித அதிகாரங்களை பெற்றுள்ளார்.
அவையின் நடவடிக்கைகளில் சமவாக்கு ஏற்படும் போது சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி தேக்கநிலையை நீக்குவார்.
அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களில் எவை பண மசோதா (அ) பண மசோதா அல்ல என சபாநாயகரே முடிவு செய்து குடியரசுத்தலைவரின் முன் அனுமதிக்கு அனுப்புவார்.
10-வது அட்டவணையில் உள்ளவாறு ஒரு உறுப்பினர் தகுதி இழப்பு பற்றி சபாநாயகர் தான் முடிவு செய்வார்.
0 கருத்துகள்