மொழிபெயர்ப்புக் கல்வி

 TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 

முக்கிய தேர்வுக்குறிப்புகள்

மொழிபெயர்ப்புக் கல்வி

"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மணவை முஸ்தபா.

"ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்கிறார் மு.கு. ஜகந்நாதர்.

மொழிபெயர்ப்பு – தொடக்கம்

மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. 

வால்காவிலிருந்து கங்கை வரை


ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் 'வால்காவிலிருந்து கங்கை வரை' ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1949 - கணமுத்தையா மொழி பெயர்ப்பு, 2016 – டாக்டர் என்.ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு, 2016 - முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு, 2018 - யூமா வாசுகி மொழி பெயர்ப்பு.

தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால்தான். இரவீந்திரநாத தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது. 

ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள்வரை மொழிபெயர்க்கப்படுகின்றன. புள்ளிவிவரப்படி அதிகமான தமிழ்நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

பயன்கலை
உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

சாகித்திய அகாதெமி நிறுவனமும் தேசிய புத்தக நிறுவனமும் பல மொழிகளிலிருந்து நல்ல படைப்புகளை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளன.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் 
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" - பாரதியார்

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 
பரவும் வகை செய்தல் வேண்டும்." - பாரதியார்

பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும்

பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். "மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்" முதலிய நூல்களும் அங்கு உள."

- தனிநாயக அடிகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்