TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான முக்கிய தேர்வுக்குறிப்புகள்
தமிழ் இலக்கணம்வழு – வழாநிலை - வழுவமைதி
வழாநிலை
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
வழு
இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும்.
வழுவமைதி
இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.
1. திணை வழுவமைதி
"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
2. பால் வழுவமைதி
"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
3. இட வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
4. கால வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
5. மரபு வழுவமைதி
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்"- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
0 கருத்துகள்