இராவண காவியம்

நூல் குறிப்பு

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். 

இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. 

இராவண காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை.

தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். 

யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

"இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" – பேரறிஞர் அண்ணா

9ஆம் வகுப்பு தமிழ்ப்பாடபுத்தகத்தில் இராவண காவியத்தில்
தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

குறிஞ்சி
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி 
பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால் (49)

அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும் 
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் 
மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே (52)

சொல்லும் பொருளும்: 
மைவனம் - மலைநெல்; 
முருகியம் - குறிஞ்சிப்பறை; 
பூஞ்சினை - பூக்களை உடைய கிளை; 
சிறை - இறகு; 
சாந்தம் - சந்தனம்
முல்லை
பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்
பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகுஅ ணைக்குமால் (58)

முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக் 
குதிரைவா லியும்களம் குவித்துக் குன்றுஎனப் 
பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும் 
அதிர்குரல் கேட்டுஉழை அஞ்சி ஓடுமே! (60)

சொல்லும் பொருளும்: 
பூவை - நாகணவாய்ப் பறவை; 
பொலம் - அழகு; 
கடறு - காடு; 
முக்குழல் - கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்; 
பொலி - தானியக்குவியல்; 
உழை - ஒரு வகை மான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்