தமிழ்விடு தூது


நூல்வெளி

  • தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
  • இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.
  • இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.
  • தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
  • இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
  • தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன
  • 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.

கண்ணி என்பதன் விளக்கம் யாது?
கண்ணி - இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

சீர்பெற்ற செல்வம்

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ - திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே – அந்தரமேல்

முற்றும்உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றம்இலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக்குலவும்

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு
ஆன நவரசம்உண் டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்புஎட்டு உடையாய்...

(கண்ணிகள் 69-76) 

இலக்கணக்குறிப்பு
  • முத்திக்கனி – உருவகம்
  • தெள்ளமுது – பணபுத்தொகை
  • குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
  • நா – ஓரெழுத்து ஒரு மொழி
  • செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
  • சிந்தாமணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்

1. கொள்வார் – கொள் + வ் +ஆர்
கொள் – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. உணர்ந்த = உணர் + த்(ந்) + த் +அ
உணர் – பகுதி
த் – சந்தி
த் – ந் ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரச்ச விகுதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்