நீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது ?

நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளமாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.



⚛பெயர்விளக்கம்:

வரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.

🔰தமிழ் இலக்கியத்தில் வரையாடு🔰

❇சீவகசிந்தாமணி:

'ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது.

❇மதுரைக் கண்டராதித்தன்:

மதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?

❇நற்றிணை:

வருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது.

இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்; ( 119)

உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? (359. குறிஞ்சி)

❇ஐங்குறுநூறு:

நெடு வரை மிசையது குறுங் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற பொய்த்தல்;
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. (287)

❇பட்டினப்பாலை:

மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்
கூர் உகிர் ஞமலிக் கொடும் தாள் ஏற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில் (126-141)

❇பதிற்றுப் பத்து:

ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு (ஆறாம் பத்து - பதிகம் )

❇பரிபாடல்:

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் (மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்