இளந்தமிழே! - சிற்பி பாலசுப்பிரமணியம்

12th New Tamil Book lesson - Ilantamile - Sirpi Balasubramaniam
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
           செந்நிறத்தப் பூக்காடாம் வான மெல்லாம்!
தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
           தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வைவெள்ளம்
விம்முகின்ற தோள்மீதில் முத்து முத்தாய்
           வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட
எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்
           ஏற்றதுணை வேறுண்டோ ? இயம்பி டாயே!


மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
           முத்தமிழே! நீயுள்ளாய்ர முன்னம் ஓர்நாள்
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்!
           பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
           மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்
           குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!
 - சிற்பி பாலசுப்பிரமணியம் 

இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்; மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்.

இலக்கியச்சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பயண இலக்கிய நூல்கள் 

இளந்தமிழே!  - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book

கருத்துரையிடுக

0 கருத்துகள்