புதிய 12ஆம் வகுப்பு - சான்றோர் சித்திரம் - மறைமலையடிகள்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக்கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், "குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டார். அவர் "அஃது எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். 'நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்' என்றார் பரிதிமாற்கலைஞர்.
'தெரியாது' என்று சொன்னவரை, "எப்படித் தேர்வு செய்யலாம்?" என்று பிறர் கேட்டபோது, 'அஃது' என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், 'எனக்கு' என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், 'தெரியாது' என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.
பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு 'தனித்தமிழ்' மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
'சுவாமி வேதாசலம்' எனும் தன் பெயரை 'மறைமலையடிகள்' என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.
முறையான பள்ளிக்கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.
கருத்துகள்
கருத்துரையிடுக