புதுமைப்பித்தன்


தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தி, "சிறுகதை மன்னன்" என்று புகழ் பெற்ற புதுமைப் பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் 1906 ம் ஆண்டு ஏப்ரல் 25 ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.   புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயாரை இழந்தார்.
அதன்பின் சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார். அவர் தாசில்தாராக வேலை பார்த்தார். அதனால் ஊர் ஊராக மாற்றிப்போக வேண்டியிருந்தது. அதனால் புதுமைப் பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் ஆரம்பக்கல்வி பயின்றார். சொக்கலிங்கம் பிள்ளை 1918ல் ஓய்வு பெற்றபின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931ல் "பி.ஏ" தேறினார்.   1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி. சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது. புதுமைப்பித்தன், நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்.
ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக, சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.   இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி" என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ். சொக்கலிங்கம், "வ.ரா" ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர். "மணிக்கொடி"யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார்.

மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி", சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு" ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா"வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்கு கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.
சென்னையில் குடியேறி, முழு நேர எழுத்தாளராக வேண்டுமென்று, புதுமைப்பித்தன் விரும்பினார். தன் விருப்பத்தை "வ.ரா"வுக்கு எழுதினார். பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை விளக்கி, சென்னைக்கு வரவேண்டாம்" என்று பதில் எழுதினார், "வ.ரா."   ஆயினும், புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச்சென்றது.

"மணிக்கொடி" யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்" பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப் பதவியில் அவர் அதிக காலம் நீடிக்கவில்லை. "மணிக்கொடி"யில், புதிய சிந்தனை படைத்த எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. புதுமைப்பித்தனுடன், பி.எஸ்.ராமையா, ந.பிச்ச மூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சிட்டி, சி.சு.செல்லப்பா ஆகியோர் மணிக்கொடி உருவாக்கிய சிறந்த எழுத்தாளர்கள். 

"மணிக்கொடி"யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி" நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார். "தினமணி" ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார்.

"நாசகாரக்கும்பல்" போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி" ஆண்டு மலரில் வெளிவந்தவை தான். 1943ல், டி.எஸ்.சொக்கலிங்கத்துக்கும், தினமணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அதனால் சொக்கலிங்கம் "தினமணி"யை விட்டு விலகி, "தினசரி"யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் தினமணியில் இருந்து விலகி தினசரியில் சேர்ந்தார்.
பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.   "தினமணி"யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்" என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி" ஆசிரியராக இருந்த பி.எஸ். ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார்.

"மணிக் கொடி" துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி" என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது. "அவ்வையார்" படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை.)   1945 ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" என்ற படக்கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி" என்ற பெயரில் படமாக்கவேண்டும் என்பது அவரது திட்டம்.

ஆனால், சில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்ததுடன், படத்தயாரிப்பு வேலைகள் முடிவடைந்தன.   இந்தச் சமயத்தில் (1947) எம்.கே.தியாகராஜ பாகவதர் சொந்தமாகத் தயாரித்த "ராஜமுக்தி" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. வசனம் எழுத புனா நகருக்குச் சென்றார். வசனம் எழுதி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காச நோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது.

1948 மே மாதம் முதல் வாரத்தில், மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு அவர் உடல் நிலை மோசமடைந்திருந்தது.   "ராஜமுக்தி"க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்தபோதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.
மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ் இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30.6.1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சாகாவரம் பெற்றவை. "நினைவுப்பாதை", "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்", "சிற்பி யின் நகரம்", "பொன்னகரம்", "அகல்யை", "கோபாலபுரம்", "கல்யாணி" முதலிய கதைகள், காலத்தை வென்ற அவருடைய பல சிறுகதைகளில் ஒருசில.

தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42வது வயதில் காலமானார்.

2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது

சிறுகதைகள்  [தொகு]

    * அகல்யை
    * செல்லம்மாள்
    * கோபாலய்யங்காரின் மனைவி
    * இது மிஷின் யுகம்
    * கடவுளின் பிரதிநிதி
    * கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
    * படபடப்பு
    * ஒரு நாள் கழிந்தது
    * தெரு விளக்கு
    * காலனும் கிழவியும்
    * பொன்னகரம்
    * இரண்டு உலகங்கள்
    * மனித யந்திரம்
    * ஆண்மை
    * ஆற்றங்கரைப் பிள்ளையார்
    * அபிநவ ஸ்நாப்
    * அன்று இரவு
    * அந்த முட்டாள் வேணு
    * அவதாரம்
    * பிரம்ம ராக்ஷஸ்
    * பயம்
    * டாக்டர் சம்பத்
    * எப்போதும் முடிவிலே இன்பம்
    * ஞானக் குகை
    * கோபாலபுரம்
    * இலக்கிய மம்ம நாயனார் புராணம்
    * 'இந்தப் பாவி'
    * காளி கோவில்
    * கபாடபுரம்
    * கடிதம்
    * கலியாணி
    * கனவுப் பெண்
    * காஞ்சனை
    * கண்ணன் குழல்
    * கருச்சிதைவு
    * கட்டிலை விட்டிறங்காக் கதை
    * கட்டில் பேசுகிறது
    * கவந்தனும் காமனும்
    * கயிற்றரவு
    * கேள்விக்குறி
    * கொடுக்காப்புளி மரம்
    * கொலைகாரன் கை
    * கொன்ற சிரிப்பு
    * குப்பனின் கனவு
    * குற்றவாளி யார்?
    * மாயவலை
    * மகாமசானம்
    * மனக்குகை ஓவியங்கள்
    * மன நிழல்
    * மோட்சம்
    * 'நானே கொன்றேன்!'
    * நல்ல வேலைக்காரன்
    * நம்பிக்கை
    * நன்மை பயக்குமெனின்
    * நாசகாரக் கும்பல்
    * நிகும்பலை
    * நினைவுப் பாதை
    * நிர்விகற்ப சமாதி
    * நிசமும் நினைப்பும்
    * நியாயம்
    * நியாயந்தான்
    * நொண்டி
    * ஒப்பந்தம்
    * ஒரு கொலை அனுபவம்
    * பால்வண்ணம் பிள்ளை
    * பறிமுதல்
    * பாட்டியின் தீபாவளி
    * பித்துக்குளி
    * பொய்க் குதிரை
    * 'பூசனிக்காய்' அம்பி
    * புரட்சி மனப்பான்மை
    * புதிய கூண்டு
    * புதிய கந்த புராணம்
    * புதிய நந்தன்
    * புதிய ஒளி
    * ராமனாதனின் கடிதம்
    * சாப விமோசனம்
    * சாளரம்
    * சாமாவின் தவறு
    * சாயங்கால மயக்கம்
    * சமாதி
    * சாமியாரும் குழந்தையும் சீடையும்
    * சணப்பன் கோழி
    * சங்குத் தேவனின் தர்மம்
    * செல்வம்
    * செவ்வாய் தோஷம்
    * சிற்பியின் நரகம்
    * சித்தம் போக்கு
    * சித்தி
    * சிவசிதம்பர சேவுகம்
    * சொன்ன சொல்
    * சுப்பையா பிள்ளையின் காதல்கள்
    * தனி ஒருவனுக்கு
    * தேக்கங் கன்றுகள்
    * திறந்த ஜன்னல்
    * திருக்குறள் குமரேச பிள்ளை
    * திருக்குறள் செய்த திருக்கூத்து
    * தியாகமூர்த்தி
    * துன்பக் கேணி
    * உணர்ச்சியின் அடிமைகள்
    * உபதேசம்
    * வாடாமல்லிகை
    * வாழ்க்கை
    * வழி
    * வெளிப்பூச்சு
    * வேதாளம் சொன்ன கதை
    * விபரீத ஆசை
    * விநாயக சதுர்த்தி

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்