சர் முகமது இக்பால்

கவிஞரும், மெய்யியல் அறிஞருமான சர் முகமது இக்பால் (Muhammad Iqbal) பிறந்த தினம்  நவம்பர் 9. 

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) வியாபாரக் குடும்பத்தில் (1877) பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார்.

# லாகூர் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் பட்டம் பெற்றார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். சட்டம் பயிலும்போதே பல கவிதைகளைப் படைத் தார். இவரது முதல் கவிதை நூல் பாரசீக மொழியில் வெளிவந்தது. அரபு, உருது மொழிகளிலும் கவிதைகள் எழுதினார். ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி மொழிகளிலும் புலமை மிக்கவர்.

# மூனிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும்கூட, இவரது இலக்கியத் திறன்தான் இவரை உலகப்புகழ் பெற வைத்தது. மிர்ஸா குர்கானி, ஹகீம் ஆமின் உத்தீன், ஹக்கீம் சுஜா உத்தீன், அப்துல் காதர் போன்ற படைப்பாளிகளுடனான தொடர்பு இவரை மேலும் பட்டை தீட்டியது.

# திருக்குர்ஆன் முழுவதையும் படித்து, ஆராய்ந்து அதையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரத்துக்குப் பின்னரும், பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும்கூட இவரது கவிதைகளைப் பொதுக்கூட்டங்களிலும், இலக்கிய அரங்குகளிலும், கவியரங்குகளிலும், சாதாரண உரையாடல்களிலும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.

# அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், சமயம் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ பாடல் 1947-ல் இந்திய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக ஒலித்தது.

# நவீனகால இஸ்லாமிய சிந்தனையாளர் எனப் போற்றப்பட்டார். இவரது முதல் கவிதை நூல் 1915-ல் வெளிவந்தது. கவிதைகள் தவிர சமூகம், கலாச்சாரம், மதம், அரசியல் தொடர்பாக இவர் உருது, ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகள், இவர் எழுதிய கடிதங்களும் பிரபலமானவை.

# இவரது உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. 1922-ல் சர் பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் சட்டம், தத்துவம் படித்தபோதே, அகில இந்திய முஸ்லிம் லீக் லண்டன் கிளையில் உறுப்பினராக இருந்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தனி நாடு தேவை என்று வலியுறுத்தினார். உருது பேசும் மக்களால் ‘கிழக்கின் கவிஞர்’ என்று குறிப்பிடப்பட்டார்.

# பாகிஸ்தான் அரசு இவரை தேசியக் கவிஞராக அங்கீகரித்தது. பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், இந்தியா, வங்கதேசம், இலங்கை உட்பட சர்வதேச இலக்கிய அறிஞர்களாலும் இன்றளவும் கொண் டாடப்படுகிறார்.

# பாகிஸ்தானில் இவரது பிறந்த தினம் ‘இக்பால் டே’ என்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

# ‘அல்லாமா இக்பால்’ என்று அறிவுலகத்தாலும் மக்களாலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட இவர் அரபு, உருது, பாரசீக மொழிகளில் எழுதிய கவிதைகள் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் போற்றப்படுகின்றன. சாகாவரம் பெற்ற ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ பாடலை இயற்றிய மகத்தான படைப்பாளியான முகமது இக்பால் 61 வயதில் (1938) மறைந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்