தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்

தமிழகத்தைத் தாக்கிய புயல்கள் - 1991 பாப் முதல் 2019 ஃபனி வரை


ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும் பட்சத்தில் எந்த புயல் எந்தத் திசையில் வருகிறது என்பதை அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

சுவிட்சர்லாந்தின் அமைத்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம், உலகம் முழுவதிலும் நிலவும் தட்பவெப்ப நிலைகளைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவ்வமைப்பு அனைத்து நாடுகளையும் ஏழு மண்டலங்களாகப் பிரித்துள்ளது. 'வட இந்தியப் பெருங்கடல்' மண்டலத்தில் இந்தியா உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து போன்ற எட்டு நாடுகள் இடம் வகிக்கின்றன.

இந்த எட்டு நாடுகளும் எட்டு பெயர்களைப் பரிந்துரை செய்தது. மொத்தம் 64 புயல் பெயர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவெடுக்கும் போது, இந்த அட்டவணையிலிருந்துதான் பெயர்கள் தேர்வுசெய்யப்படும். இப்பணியை டெல்லியில் அமைந்துள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. இந்தியாவில் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2004-ம் ஆண்டு முதல்தான் தொடங்கியது.

இதுவரை தமிழகத்தை 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. இதில் 1966-ம் ஆண்டு உருவான புயலினால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1977-ம் ஆண்டு ஒரு பெரும் புயல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் புயலினால்  திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டம் பலத்த சேதத்திற்கு உள்ளது. அடுத்து, 1985-ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கியது. கடந்த 1998-ல் உருவான புயல் அதிக அளவில், அதாவது சராசரியை விட 30 விழுக்காடு கூடுதலான மழையைக் கொட்டித் தீர்த்தது.  

ஃபர்னூஸ் புயல் (2005)
பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் கடந்த 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவானது. இதில், டிசம்பர் முதல் வாரத்தில் உருவான ஃபர்னூஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.  தமிழகமே வெள்ளக்காடானது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மாநிலம் முழுவதும் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

நிஷா புயல்  (2008)
2008-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக உருமாறியது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கக் கடலில் உருவான மிகப்பெரிய புயலென்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தப் புயலின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது, சுமார் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளது.

ஜல் புயல் (2010)
கடந்த 2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் பக்கம் நகர்ந்து வந்து நவம்பர் 6-ம் தேதி 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000-த்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

தானே புயல்  (2011)
2011-ம் ஆண்டு வங்கக் கடலில் உருவான இந்த புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயலாகும். இந்த புயலினால், 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, எண்ணற்ற வீடுகள் சேதமாகின.

நீலம் புயல் (2012)
2012-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி பின் புயலாக மாறியது. பல நகரங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. பெருமளவு உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.

மடி புயல் (2013)
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மடி புயல் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதினால், மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

வர்தா புயல் (2016)
இந்த ஆண்டில் உருவான ரோனு, கியான்ட், நடா புயல்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும், வருடக் கடைசியான டிசம்பர் மாதம் உருவான வரதா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து. டிசம்பர் 12 சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின் தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து  முடங்கிய நிலையில், சென்னை மாநகரமே திண்டாடிப் போனது.

ஒக்கி புயல்  (2017)
இலங்கையருகே வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ஒக்கி புயல், மணிக்கு 185 கி.மீ வேகத்தில் வீசிய காற்று, நவம்பர் 30-ம் தேதி
கன்னியாகுமரி மற்றும் கேரளாவைப் புரட்டிப் போட்டுச் சென்றது. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் கன்னியாகுமரி பகுதியே தனித்துப் போனது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, இலங்கை, தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கஜா புயல் (2018)
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் உருவாகிய முதல் புயலாகும். இந்தப் புயலால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கணக்கே செய்யமுடியாத அளவு இயற்கை வளங்கள், தென்னை மரங்கள், விவசாயப் பயிர்கள் பெரும் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.

ஃபனி புயல் (Cyclone Fani) 2019
ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் வங்காளதேசம் நாட்டிலும் பாதிப்புகளை ஏற்படுத்திய அதி தீவிரப் புயலாகும். இப்புயலால் ஒடிசாவில் 35 பேரும், உத்திரப் பிரதேசத்தில் 8 பேரும், வங்கதேசத்தில் 14 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்திற்குக் குறிப்பாகச் சென்னைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்