செய்தி வெளியீட்டு எண்: 56/2020 நாள்: 30.12.2020
தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் பின்வரும் முக்கிய அறிவுரைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:
- காலை 9.15 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்குச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மைப் பேனாக்களை பயன்படுத்தக் கூடாது.
- விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (E) என்ற வட்டத்தினைக் கருமையாக்க வேண்டும்.
- விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆதலால் இதனைக் கவனத்துடன், பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். இச்செயலைச் செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது, 1.00 மணி முதல் 1.15 மணி வரை இந்தச் செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளினைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கூறிய அம்சங்கள் தேர்வர்களின் நலனுக்காவும், எவ்வித தவறுகளும் நிகழாமல் தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தப்பட உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக