பாரிஸ் அமைதி மாநாடு

பாரிஸ் அமைதி மாநாடு, போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1919 ஜனவரி திங்களில் தொடங்கியது. உட்ரோ வில்சன் (அமெரிக்க அதிபர்), லாயிட் ஜார்ஜ் (இங்கிலாந்துப் பிரதமர்), கிளமென்சோ (பிரான்சின் பிரதமர்) ஆகிய மூவரும் கலந்தாய்வில் முக்கியப் பங்குவகித்தனர்.

மற்றுமொரு போரைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜெர்மனிய அரசு உடன்படிக்கையை ஒத்துக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டது. 1919 ஜூன் 28ஆம் நாள் அமைதி உடன்படிக்கை வெர்செய்ல்ஸ் கண்ணாடி மாளிகையில் கையெழுத்திடப்பட்டது. 

உடன்படிக்கையின் சரத்துக்கள் 

1. போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும். எனவும் மைய நாடுகள் அனைத்தும் போர் இழப்பீட்டுத்தொகையை வழங்கவும் வலியுறுத்தப்பட்டன. 

2. ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

3. ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது. 

4. ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன. 

5. ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது. 

6. அல்சேஸ்-லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன. 

7. முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது. 

8. வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன. 

9. போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது. 

10. நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின்கீழ் ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன்நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நேசநாடுகள் ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளுடன் தனித்தனியாக உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. துருக்கியோடு மேற்கொள்ளப்பட்ட செவ்ரஸ் உடன்படிக்கையைச் சுல்தான் ஏற்றுக்கொண்டாலும் அது முஸ்தபா கமால் பாட்சாவும் அவரைப் பின்பற்றுவோரும் எதிர்த்ததால் தோற்றுப்போனது.

அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் தனதுபதினான்கு அம்சத்திட்டத்தை நேசநாடுகள் பின்பற்றுவதற்காக முன்வைத்தார். அவற்றில் மிகமுக்கியமானதாக அவர் கோடிட்டுக்காட்டியது "மிகப்பெரும் நாடுகள் சிறிய நாடுகள் எனும் பேதமில்லாமல் அனைத்து நாடுகளின் அரசியல் சுதந்திரத்திற்கும் அந்நாடுகளின் நிலப்பரப்பின் ஒருமைப்பாட்டிற்கும் எல்லைகளின் உறுதிப்பாட்டிற்கும் பரஸ்பரம் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நாடுகளைக் கொண்ட பொதுஅமைப்பை உருவாக்க வேண்டும்" என்பதாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்