தேசிய ஊட்டச்சத்து வாரம்

தேசிய ஊட்டச்சத்து வாரம், 1-7 செப்டம்பர்

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் தொடங்கப்பட்ட ஓர் ஆண்டு நிகழ்வே தேசிய ஊட்டச்சத்து வாரம் (NNW). இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-7 வரை நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்தமாகத் தேசிய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஊட்டச்சத்து வாரத்தைக் கொண்டாடுவதின் முதன்மையான நோக்கமாகும்.

”பிறந்த மற்றும் இளம் குழந்தைகளுக்கு உகந்த உணவூட்டல் பழக்கம்: சிறந்த குழந்தை நலம்” என்பதே தேசிய ஊட்டச்சத்து வாரம், 2017-ன் கருத்துரு. பிறந்த உடனும், இளம் பருவத்திலும் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்தை அளிப்பதனால் குழந்தைகள் வளர்ந்து. மேம்பட்டு, கற்று, விளையாடி பிற்காலத்தில் சமுதாய வளர்ச்சியில் பங்கேற்று நன்மை பயக்கின்றனர். ஆனால், உட்டச்சத்து இன்மை அறிவுத் திறனையும், உடல் வளர்ச்சியையும், நோய்த்தடுப்பு ஆற்றலையும்  பாதித்துப், பிற்கால வாழ்க்கையில் நோய் ஆபத்தைக் (நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவை) கூட்டுகிறது.

ஊட்டச்சத்தின்மை பல வகைகளில் காணப்படுகிறது. எந்த வகையான ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லாமல் குழந்தைகள் திகழ்வதே இறுதி நோக்கம் ஆகும். இருப்பினும், பல பிறந்த குழந்தைகளுக்கு உகந்த உணவு கிடைப்பதில்லை.  உகந்த முறையில் பிறந்த மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவூட்டல் பழக்கம் மூலமாக சிறந்த குழந்தைகள் நலத்தைப் பேணும் வகைமுறைகளாவன:

(அ) கர்ப்ப காலத்திற்கு முன்னும் பின்னும்,  பாலூட்டும் போதும்  தாய்க்குப் போதுமான ஊட்டச்சத்து.

(ஆ) தாய்ப்பாலூட்டலை ஊக்குவித்தல்:
பிறந்து 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்குதல்
6 மாதத்துக்குத் தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல்
உடல்நலம் இல்லாத போதும் தாய்ப்பாலூட்டலைத் தொடர்தல்

தங்கள் குழந்தைகளுக்கு உகந்த முறையில் தாய்ப்பாலூட்டுவதை உறுதிப்படுத்தத்  தாயும் குடும்பமும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.  தாயின் முழு அன்பு (MAA ) என்பதே  உகந்த தாய்ப்பாலூட்டலை ஊக்குவித்து, பாதுகாத்து ஆதரிக்க இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் நாடு முழுவதும் தொடங்கியுள்ள தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்புத் திட்டம்.

(இ) தாய்ப்பாலூட்டலை இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் தொடரும் அதே வேளையில் ஆறு மாத்த்துக்குப் பின் போதுமான அளவில் ஊட்டச்சத்து நிறைந்த பாதுகாப்பான கூடுதல் திட உணவை அறிமுகப்படுத்துதல்.

கூடுதல் உணவூட்டல்

ஆறு மாதத்திற்குப் பின் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. கூடுதலாக வேறு உணவும் நீராகாரங்களும் தேவைப்படும். தாய்ப்பால் மட்டுமே பருகி வந்த குழந்தைக்கு பிற உணவுகளும் அளித்தல் கூடுதல் உணவூட்டல் எனப்படும். இது 6 மாதத்தில் இருந்து 24 மாதங்கள் வரை தொடரும் (தாய்ப்பாலை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து அளிக்கலாம்).

இதுவே வளர்ச்சியின் முக்கிய கட்டம். ஊட்டச்சத்துக்  குறைபாடு மற்றும் நோய்கள், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுக் குறையை உருவாக்கும்.

கூடுதல் உணவூட்டலுக்கான குறிப்புகள்:

கூடுதல் உணவு நேரத்துக்கு நேரம் அளிக்க வேண்டும். 6 மாதத்துக்குப் பின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலோடு கூடுதல் உணவு ஊட்ட வேண்டும். 6-8 மாதங்களில் நாள் ஒன்றுக்கு 2-3 வேளையும், 9-11 மாதங்களில் 3-4 வேளையும், 12-24 மாதங்களில் இதனோடு 1-2 வேளை சத்துள்ள சிற்றுண்டி சேர்த்தும் உணவூட்ட வேண்டும்.

கூடுதல் உணவு போதுமான அளவுக்கு இருக்க வேண்டும். போதுமான அளவுக்கு, போதுமான வேளைகள், வளரும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைக்கு ஏற்பத் தாய்ப்பாலுடன் சேர்த்து பல வித உணவுகளைத் தொடர்ந்து ஊட்ட வேண்டும்.
பாதுகாப்பான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். குழந்தையின் வயதுக்கு ஏற்ப உணவு பதமாக இருக்க வேண்டும். உள-சமூகப் பராமரிப்புக் கொள்கைகளுக்கு ஏற்ப குழந்தையின் குறிப்பறிந்து வழங்க வேண்டும்.

குறிப்பறிந்து உணவூட்டல்: சிறு குழந்தைகளுக்குக் கவனத்துடன் அவர்களைத் தூண்டி உணவூட்ட வேண்டும். குழந்தையின் பசி உணர்வைக் குறிப்பால் அறிந்து குழந்தை உண்ணும்படி தூண்டுதல் அளிக்க வேண்டும்.  இதுவே குறிபறிந்து உணவூட்டல் எனப்படும்.

உடல் செயல்பாடுகளுக்கான அடிப்படை சேவைகளும் வாய்ப்புகளும் உள்ளடங்கிய ஆரோக்கியமான சூழல்.

ஊட்டச்சத்தின்மை ஒரு பன்முகப் பிரச்சினை. அதை எதிர்கொள்ள பல்முனை சார்ந்த அணுகுமுறை தேவை. சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு [ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ICDS) மூலம்], பள்ளிக் கல்வி, கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து நிர்வாகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர அதிகாரவமைப்பு மற்றும் வேளாண்மை மற்றும் துணைத் துறைகள் ஆகிய பல்வேறு துறைகள், சிறந்த குழந்தை ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்திற்காகத் தங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்