புவியியல் | தல நேரம் (Local Time), திட்ட நேரம் (Standard time)

தல நேரம் (Local Time) | திட்ட நேரம் (Standard time) | இந்திய திட்டநேரம் (Indian Standard time) | உலக நேரமண்டலம் (Time zone) 

தல நேரம் (Local Time)
  • ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி.  இதுவே தல நேரம் எனப்படும்.
  • ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கு நேராக ஒரு நாளில் ஒருமுறைதான் சூரியன் நேர் உச்சிக்கு வரமுடியும். எனவே தலநேரம் ஒவ்வொரு தீர்க்கக் கோட்டிற்கும் மாறுபடும்.  
  • 0° கிரீன்விச் தீர்க்கக் கோட்டிற்குச் சூரியன் உச்சநிலையில் வரும் நண்பகல் 12 மணி இந்த இடத்திற்குத் தலநேரம் ஆகும். மேலும் பன்னாட்டுத் திட்டநேரம் இங்கிருந்து கணக்கிடப்படுகிறது. இது GMT (Greenwich Mean Time) என அழைக்கப்படுகிறது. 
  • கிரீன்விச் தீர்க்கக் கோட்டில் நண்பகல் 12 மணி என்றால் அங்கிருந்து, கிழக்கு தீர்க்கம் 1 பாகையில் பிற்பகல் 12:04 மணி எனவும், மேற்கு தீர்க்கம் 1 பாகையில் முற்பகல் 11 : 56 ஆகவும் இருக்கும். எனவே எந்த ஒரு தீர்க்கக்கோட்டிலிருந்தும் கிழக்கே செல்லச் செல்ல நேரம் கூடும். மேற்கே செல்லச் செல்ல நேரம் குறையும்.
திட்ட நேரம் (Standard time) 
  • ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும்பொழுது தலநேரம் அமையும். 
  • ஒரு நாட்டின் வழியே பல தீர்க்கக்கோடுகள் செல்லும்படி கணக்கிட்டால் ஒரு நாட்டிற்குப் பலவிதநேரம் அமைந்துவிடும். 
  • ஒரு நாட்டிற்கு ஒரே மாதிரியான நேரக்கணக்கீடு இருக்கவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட ஒரு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக் கொண்டு பொதுவான நேர‌த்தை அமைத்துக்கொள்வது திட்டநேரம் எனப்படும். 
  • ஒரு நாட்டின் திட்டநேரத்தினைக் கணக்கிட அந்நாட்டின் வழியாகச் செல்லும் ஒரு குறிப்பிட்ட தீர்க்கக்கோடு பயன்படுத்தப்படுகிறது. இது திட்டதீர்க்கக்கோடு (Standard Meridian) எனப்படுகிறது. 
  • திட்டதீர்க்கக்கோடு 15° அல்லது 7½° யின் மடங்குகளாக இருக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், அந்நாட்டின் திட்டநேரத்திற்கும், கிரீன்விச் திட்டநேரத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஒரு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் என்ற கணக்கீட்டில் அறியலாம்.
இந்திய திட்டநேரம் (Indian Standard time) 

  • இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 68°7' கிழக்கு முதல் 97° 25' கிழக்கு வரை உள்ளது. 
  • சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன. 
  • இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82½° கிழக்கு தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது. 
  • இந்தியா கிடைமட்டப் பரவலில் மேற்கில் குஜராத்தில் உள்ள கெள‌ர்மோட்டா (Ghuar Mota) என்ற இடத்திற்கும், கிழக்கில் அருணாச்சல பிரதேசத்திலுள்ள கிபித்து (Kibithu) என்ற இடத்திற்கும் சமதூர இடைவெளியில், உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzabur) என்ற இடத்தின் வழியே 82½° கிழக்கு தீர்க்கக்கோடு செல்கிறது. 

உலக நேரமண்டலம் (Time zone) 

  • உலகளவில் 24 நேர‌ மண்டலங்கள் உள்ளன. சில நாடுகள் நீண்ட பரப்பளவில் காணப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தல நேரங்களைக் கொண்டுள்ளன. 
  • ரஷ்யா நாட்டிற்கு 7 நேர மண்டலங்கள் உள்ளன.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. மிகவும் அற்புதமாக இருந்தது... நாங்கள் புரிந்துகொள்ள மிக எளிமையாகவும் இருக்கிறது..

    பதிலளிநீக்கு