TNPSC, TET Exams | பொதுத்தமிழ் நாடகக்கலை

இக்கட்டுரையின் முந்தையபகுதியைப் படிக்க...

காலம்தோறும் நாடகக்கலை:
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.

பதினோராம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன. 

நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின.
பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துள்ளன.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன், ஒழுக்கங்கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியாரின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

இக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள், மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக்கூறுகளிலிருந்து படைக்கப்பட்டன. ஊர்களில், தெருக்கூத்து என்னும் நாடகவகை, புராணக்கதைகளையே மையமாகக் கொண்டு நடத்தப் பெற்றது. 
பின்னர், நாடகங்களில் உரையாடல் சிறப்பிடம் பெற்றது; விடிய விடிய நடைபெற்று வந்த நிலைமாறி நாடகம் மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன.

காசி விசுவநாதரின் டம்பாச்சாரி விலாசம் குறிப்பிடத் தக்கது. 

பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தைக் கி.பி.1891ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவியதாகும்.

நாட்டு விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில், பல்வேறு காலத்திய தேசிய நாடகங்கள் அரங்கேறின.

கதரின் வெற்றி நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும்.

இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன. நாடக மேடைகளில் தேசியப்பாடல்கள் முழங்கின.

சங்கரதாசு சுவாமிகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் சங்கரதாசு சுவாமிகள்.
நாடக உலகின் இமயமலை என்றும், தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்றும் சுவாமிகள் அழைக்கப்பட்டார். 

பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை சங்கரதாசு சுவாமிகள் எழுதியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார், ஒளவை சண்முகனார் பற்றிய தகவல்கள் படிக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்