முதன்மைத்தேர்வு (Main Examination)
சிவில் சர்வீசஸ் தேர்வின் மிகமுக்கியமான கட்டம் முதன்மைத்தேர்வு. இதில்
எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இறுதி வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும்.
இந்தத் தேர்வு எழுத்துத்தேர்வு ( descriptive type questions).
இந்த முதன்மைத் தேர்வில் தமிழ்வழி மாணவர்கள் நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பிறமாணவர்களை பின்னுக்குத் தள்ளிவிடலாம்! எப்படி?
அதுதான் தாய்மொழிவழிக் கல்வியின் பலம்! இந்தத் தேர்வில் பாடங்களை எந்த
அளவுக்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதைப் பொருத்து மதிப்பெண்கள்
கிடைக்கும். வினாக்கள் நம் அறிவையும் நுணுகி ஆராயும் திறனையும் சோதிப்பதாக
அமையும். அதைச் சரியாக விடைகளில் வெளிப்படுதிவிட்டால் நல்ல மதிப்பெண்களைப்
பெறலாம். தாய்மொழி வழிக்கல்வியில் படிப்பவர்களால் நிச்சயம் நன்முறையில்
தங்களின் கருத்துக்களை வெளிப்படுத் முடியும். முதன்மைத் தேர்விலும்
வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் இருக்கும். தமிழ்வழியில்
தேர்வு எழுதுபவர்கள் வினாக்களை நன்கு புரிந்துகொண்டு விடையளிக்கவேண்டும்.
வினாக்களைப் புரிந்துகொண்டால் பாதிவிடைகளை உருவாக்கிவிடலாம்!
முதன்மைத் தேர்வில் ஒரு கட்டுரைத்தாளும், நான்கு பொது அறிவுத்தாள்களும்,
ஒரு விருப்பாடத்தில் இரண்டு தாள்களும் ஆக 7 தாள்கள் உள்ளன. இவை தலா 250
மதிப்பெண்களைப் பெற்றவை. இவற்றில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்
தரப்படுத்துதலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இது தவிர ஆங்கிலம்,
தமிழ் ஆகிய மொழித்தாள்கள் இரண்டு தகுதித் தாள்களாக உள்ளன. இவற்றில் பெறும்
மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களில் இடம்பெறாது. இதில் 35% மதிப்பெண்
எடுத்து தேர்ச்சிபெற்றால் போதுமானது. இதில் உள்ள ஆங்கிலத்தாளைப் பார்த்து
அச்சம் கொள்ளத் தேவையில்லை. வினாக்கள் உண்மையில் மிகவும் அடிப்படையான
ஆங்கிலஅறிவைச் சோதிக்கும் வகையில்தான் இருக்கும். ஒரு எட்டாம் வகுப்பு
மாணவணால் இந்தத் மொழிப்பாடத் தேர்வை எளிதில் எழுதிவிடமுடியும்.
முதன்மைத்தேர்வு மூலகங்கள்!
Insights on India
முதன்மைத்தேர்வின் பொது அறிவுத்தாள் நான்கினுக்கும்
http://www.insightsonindia.com
என்ற இணையதளம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தளத்தில் தினசரி
வெளிவரும் Answer writing Challenge - Insights Secure 2016 என்ற
தலைப்பிலான மாதிரித்தேர்வு வினாக்களை எழுதிப் பழகவேண்டும். இந்த இணையதளம்
மிகச்சிறந்தமுறையில் வினாக்களை வடிவமைத்து வெளியிடுகிறது.
சமூக ஊடகத்தின் கூட்டுமுயற்சியில் இந்தத் தளம் இயங்குவதால் மாணவர்களுக்கு
ஓப்பன் சோர்ஸ் முறையில் சிறந்த வழிகாட்டுதலை வழங்குகிறது. முன்னர் சிவில்
சர்வீசஸ் தேர்வுகளுக்கு பெருநகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து
படித்தே ஆகவேண்டும் என்றநிலை இருந்தது. அதனை இதுபோன்ற இணையதளங்கள் மாற்றி
அமைத்துள்ளன. இன்று ஒரு ஸ்மார்ட் ஃபோனும் இணைய இணைப்பும் இருந்தால்போதும்!
மிகச்சிறந்த தரமான வழிகாட்டுதல்ளை குக்கிராமத்திலிருந்தும் இலவசமாகப்
பெற்றுக்கொள்ளலாம்! இந்தத் தொழில்நுட்ப புரட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக
சிவில்சர்வீசஸ் தேர்வுமுறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதனைப் புதியவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நூற்பட்டியல்:
இனி ஒவ்வொரு தாளுக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் படிக்கவேண்டிய நூற்பட்டியலைப்
பார்க்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே முதல்நிலைத்தேர்வுக்கு
பரிந்துரைத்தவைதான் என்பதை கவனத்தில் கொள்ளவும். சிறப்பாக முதன்மைத்
தேர்வுக்கு என சில நூல்களையும் படிக்கவேண்டும். அவற்றையும் பகுதிவாரியாகக்
கொடுத்துள்ளேன்.
அ. பொது அறிவுத்தாள் 1 (General studies paper 1)
A. culture:
1. பண்டைக்கால இந்திய வரலாறு, ஆர்எஸ். சர்மா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் )
2. Medieval India, Satish Chandra ( old NCERT)
இவ்விரண்டு நூல்களிலும் உள்ள சமயம், பண்பாடு, கலை, கட்டிடக்கலை, இலக்கியம் போன்ற பகுதிகள் போதும். அரசியல் வரலாறு தேவையில்லை.
B. Modern Indian History
1.விடுதலைப் போராட்ட வரலாறு, க.வெங்கடேசன்.
2.நவீன இந்தியா, பிபன் சந்திரா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
C. Post independence period.
1. சமகால இந்திய வரலாறு, க.வெங்கடேசன்.
2. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா, பிபன் சந்திரா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)
E. Indian society, role of women, poverty, globalization etc.
இப்பகுதிக்கு எனத்தனியாக நூல்கள் படிக்கத் தேவையில்லை. நல்ல செய்தித்தாள் மற்றும் வாசிப்பு பழக்கம் இருந்தால் போதும்.
இவற்றில் இந்தியப் புவியியல் முக்கியமான பகுதி. அதற்கு அதிக கவனம் கொடுத்துப் படிக்க வேண்டும்.
ஆ. பொது அறிவுத்தாள் 2 (General studies Paper 2)
A.Polity
1.
Indian polity , Lakshmi kanth
2.அரசியலமைப்புச் சட்டம், ப.அர.ஜெயராஜன்
3.இந்திய அரசியலமைப்பு, பேராசிரியர். சந்திரசேகரன்
4.நமதுஅரசியலமைப்பு, சுபாஷ்காஷ்யப் (NBT,தமிழ் மொழிபெயர்ப்பு).
இந்தத் தாளில் பாடத்திட்டத்தில் உள்ள பிரிவுகளில் நடப்பு நிகழ்வுகள்
சார்ந்து வினாக்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. எனவே, நல்ல செய்தித்தாள்
மற்றும் பத்திரிக்கைகள் வாசிப்பது அவசியம். பத்திரிக்கைகளில் நடுப்பக்கக்
கட்டுரைகள் மற்றும் தலையங்கப் பகுதிகள் முக்கியமானவை.
இ.பொது அறிவுத்தாள் 3 (General Studies paper 3)
A. Economy
இந்தத்தாளில் முற்றிலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்து வினாக்கள் வருகின்றன.
இதற்கு மேற்சொன்னவாறு பத்திரிக்கைகள் வாசிப்பு அவசியம். இன்சைட்ஸ் இணயதளம்
இந்தத் தாளுக்கு பெரிதும் பயன்படும்.
இணைப்பு:
http://www.insightsonindia.com/downloads/
நடப்பு பொருளாதாரநிகழ்வுகளைப் புரிந்து கொள்ள சில அடிப்படை நூல்களைப் படித்திட வேண்டும்.
அவையாவன:
1. Indian Economy Key concepts, Sankar Ganesh Karuppaiah.
2. Prathiyogita Darpan.
3.இந்தியப் பொருளாதாரம் முக்கிய கருத்துக்கள், சங்கர் கணேஷ் கருப்பையா.
4.. நாட்டுக்கணக்கு, சோம.வள்ளியப்பன்
இந்தியப் பொருளாதாரம் குறிப்புதவி நூற்கள் ( Reference books)
1. Indian economy, Dutt and Sundaram.
2. Indian Economy, Ramesh singh.
B. Agriculture
1. People and economy, 12th NCERT.
C. Science and technology
1. The hindu
2. தமிழ் இந்து இணையதளம். இந்து இணையதளத்தில் அறிவியல் சார்ந்த ஓராண்டு செய்திகளைத் தேடிப் படிக்கவும்.
ஈ. பொது அறிவுத்தாள் 4 (General Studies Paper 4.)
இப்பகுதி Ethics integrity and aptitude என்ற தாள் ஆகும். இதில் தியரி
என்ற கொள்கை கருத்துகள் பகுதியும் கேஸ் ஸ்டடீஸ் ( Case studies) என்ற
நிகழ்வுகள்சார் பகுதிகளும் உள்ளன. இதற்கு என தமிழில் தனியான நூல்கள்
ஏதுமில்லை. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களில் இல்லாத
அறக்கருத்துக்கள் ஏது! எனவே இப்பகுதிக்கு என்று தனியாக ஏதும்
படிக்கவேண்டியதில்லை. விடைகளில் தமிழ் அறநூல்களில் உள்ள கருத்துக்களை
மேற்கோள்காட்டி எழுதலாம்.
இன்சைட்ஸ் இணையதளத்தில் வரும் மாதிரி
வினாக்களை எழுதிப்பார்ப்பது நேரமேலாண்மைக்கு உதவியாக இருக்கும். மற்றபடி
சில அறநெறி கலைச்சொற்களை தெரிந்து மொழி பெயர்த்து வைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலைச்சொல் அறிமுகத்துக்கு கீழக்கண்ட நூல் பயன்படும்:
உ. கட்டுரைத்தாள் (Essay paper)
இந்தத் தாளில் இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும்.தமிழ் வழித்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களை இத்தாளில் பெறலாம். இதற்கென தனியாக
எதுவும் படிக்கவேண்டியதில்லை. பரந்துபட்ட வாசிப்பு இருந்தால் போதும். நல்ல
மொழி ஆளுமை தேவை. ஆங்கிலத்தைவிட தாய்மொழியில் நிச்சயம் நல்ல மொழி ஆளுமையைச்
செலுத்தலாம் என்பது என்கருத்து.
மொழித்தாள்கள்
ஊ. ஆங்கிலம் (Compulsory English.)
இத்தாளுக்கு முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் மாதிரியாப் பார்த்து வைத்துக் கொள்ளலாம்.
ஊ. தமிழ் மொழித்தாள்
சிறப்பான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை.
முதல் நிலைத்தேர்விலிருந்து முதன்மைத்தேர்வின் பொது அறிவுத்தாள்கள்,
கட்டுரை மற்றும் கட்டாய மொழித்தாள்கள் வரை ஓரளவு விளக்கியுள்ளேன்.
இன்னும் விருப்ப பாடங்கள் குறித்தும், நேர்முகத்தேர்வு குறித்தும் அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.
நண்பர்களே,
கனவு மெய்படவேண்டும்! காரியத்தில் உறுதி வேண்டும்!
வாழ்த்துகளுடன்,
க.இளம்பகவத்.
கருத்துகள்
கருத்துரையிடுக