TET, TNPSC பொதுத்தமிழ் இலக்கணம்
பொருள்கோள் பகுதி-1
ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர். பொருள்கோள் எண் (8) வகைப்படும்.
1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
2. மொழிமாற்றுப்பொருள்கோள்
3. நிரல்நிறைப்பொருள்கோள்
4. விற்பூட்டுப்பொருள்கோள்
5. தாப்பிசைப்பொருள்கோள்
6. அளைமறிபாப்புப்பொருள்கோள்
7. கொண்டுகூட்டுப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்
1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
இடையறாது செல்லும் ஆற்றுநீரைப்போலப் பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள்கொள்வது ஆற்றுநீர்ப்பொருள்கோளாகும்.
(எ.கா.)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாய் வார். - குறள், 6
பொறிவாயில் ஐந்தவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாகக்கொண்ட ஐவகை ஆசைகளையும்விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியில் நின்றவர்; நீடு வாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வர். இக்குறட்பாவில் பொறிவாயில் எனத் தொடங்கி, நீடுவாழ்வார் என்பது வரையிலுள்ள சொற்கள் முன்பின்னாக மாற்றம் பெறாமல் தொடர்ச்சியாக அமைந்து பொருள்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. ஆதலின் இப்பாடல், ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆயிற்று.
2. மொழிமாற்றுப்பொருள்கோள்
ஓரடியுள் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் மொழிமாற்றுப்பொருள்கோள் என வழங்கப்படும்.
(எ.கா.) சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.
இப்பாடலை அப்படியே படித்தால் பொருள் தெளிவு இருக்காது. இதனைச் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு (முயல்) நீத்து என அந்தந்த அடியிலுள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் வேண்டும்.
3. நிரல்நிறைப்பொருள்கோள்
செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறைமாற்றாமல், வரிசையாக அமைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறைப்பொருள்கோள் ஆகும்.
(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாய்க்கை
பண்பும் பயனும் அது. - குறள், 45
இக்குறட்பாவில் அன்புக்குப் பண்பும், அறத்துக்குப் பயனும் நிரல்நிறையாக வந்து அமைந்துள்ளதனால், இப்பாடல் நிரல்நிறைப்பொருள்கோள் ஆயிற்று.
4. விற்பூட்டுப் பொருள்கோள்:
வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது விற்பூட்டுப் பொருள்கோள். இதனைப் பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
(எ.கா.)
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. - குறள், 336
இக்குறளில், உலகு என்னும் இறுதிச்சொல் முதல்சொல்லான நெருநல் என்பதோடு சேர்த்துப் பொருள் கொள்வதனால் இது விற்பூட்டுப் பொருள்கோள்.
கருத்துகள்
கருத்துரையிடுக