பெரியபுராணம் 9th Tamil

 

திருநாட்டுச் சிறப்பு 1.    மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு         பூவி ரித்த புதுமதுப் பொங்கிட         வாவி யிற்பொலி நாடு வளந்தரக்         காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால் (பா.எ.59)

2.     மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
        கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
        தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
        வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் (பா.எ.63)
3.     காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
        மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை   
        கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
        நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் (பா.எ.67)

4.    அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில் 
        துன்னும் மேதி படியத் துதைந்தெழும் 
        கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன 
        மன்னு வான்மிசை வானவில் போலுமால் (பா.எ.69)

5.     அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
        பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
        சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
        விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார் (பா.எ.73)

6.     சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
        காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
        ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
        போல்வலங் கொண்டு சூழும் காட்சியின் மிக்க தன்றே. (பா.எ.74)

7.     நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
        கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
        தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
        நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். (பா.எ.78)

சொல்லும் பொருளும்: மா - வண்டு மது - தேன் வாவி-பொய்கை
வளர் முதல் - நெற்பயிர்
தரளம் - முத்து
பணிலம் - சங்கு
வரம்பு - வரப்பு
கழை - கரும்பு
கா - சோலை
குழை - சிறு கிளை
அரும்பு - மலர் மொட்டு
மாடு - பக்கம்
நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்
கோடு - குளக்கரை
ஆடும் - நீராடும்
மேதி - எருமை
துதைந்து எழும் - கலக்கி எழும்
கன்னி வாளை - இளமையான வாளைமீன்
சூடு - நெல் அரிக்கட்டு
சுரிவளை - சங்கு
வேரி -தேன்
பகடு - எருமைக்கடா 
பாண்டில் - வட்டம் 
சிமயம் - மலையுச்சி
நாளிகேரம் - தென்னை 
நரந்தம் - நாரத்தை 
கோளி - அரசமரம் 
சாலம் - ஆச்சா மரம்
தமாலம் - பச்சிலை மரம்
இரும்போந்து - பருத்த பனைமரம்
சந்து - சந்தன மரம் 
நாகம் நாகமரம் 
காஞ்சி - ஆற்றுப்பூவரசு

இலக்கணக்குறிப்பு
கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள்
விரிமலர் - வினைத்தொகை
தடவரை - உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்
பாய்வன - பாய் + வ் + அன் + அ
பாய் - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை, 
அன் - சாரியை
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்