சோமசுந்தர பாரதியார்

ஒருமுறை எட்டயபுரம் அரண்மனைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். 
பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த அப்புலவர், இருவருக்கும் 'பாரதி' என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.

பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். 
வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ. உ. சி. யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது என்று வ. உ. சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். 
இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். 
தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். 
இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். 
வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது. அவருடைய தீந்தமிழுக்குச் சான்று.

"கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு".

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Very useful Tamil ilakkiya varalaru Notes for TNPSC Group 4 and Group II, IIA Exams. Thank you sir... I want more study materials and online tamil tests

    பதிலளிநீக்கு