இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை

 இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே வணிகத் தொடர்பு இருந்தது. இந்தியப் பொருட்களான பட்டு, கைத்தறி, நறுமணப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று வழித்தடங்களில் ஏற்றுமதியாயின.

இதில் இரு வழித்தடங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் அராபியர் படையெடுப்பின் விளைவாக தடைபட்டன.
கி.பி.1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றியதால் மூன்றாவது வழித்தடமும் தடைபட்டது.

எனவே, இந்தியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு கடல்வழி காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போர்த்துக்கீசியர்கள்:-

கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்த்துக்கீசியர்கள். போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டு மாலுமிகளுக்கு பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கினார். எனவே இவர் “மாலுமி ஹென்றி” எனப் போற்றப்பட்டார்.

கி.பி.1487-ல் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பார்த்தலோமியா டயஸ், முதன் முதலில் கடல்பயணம் செய்தார். ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை அடைந்ததும், புயல் அதிகமாக வீசியதால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை.

இம்முனைக்கு “புயல்முனை” எனப் பெயரிட்டார். இதைக் கடந்தால் புதிய பகுதிகளைக் காணலாம் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எனவே இப்புயல்முனை “நன்னம்பிக்கை முனை” என்றழைக்கப்பட்டது.
கி.பி1498-ல் போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைக் கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தடைந்தார். அவரை மன்னர் சாமரின் வரவேற்று உபசரித்தார்.

போர்த்துக்கீசியர்கள் இதனை தொடர்ந்து கள்ளிக்கோட்டை, கொச்சின், மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வாணிகத்தலங்களை அமைத்தனர்.
போர்த்துக்கீசியர் வாணிகத்தைக் கவனிக்க வந்த முதல் ஆளுநர் பிரான்சிஸ்கோ-டீ-அல்மெய்டா (கி.பி. 1505-1509). இவரது கொள்கை “நீலநீர் கொள்கை” எனப்படும்.

போர்த்துக்கீசிய இரண்டாவது ஆளுநர் அல்போன்ஸோ-டி-அல்புகர்க் இவர் கி.பி.1510-ல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி தலைநகரமாக்கினார்.

இவருக்குப் பின் வந்தவர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் செல்வாக்கைக் கட்டிக்காக்க முடியவில்லை.

டச்சுக்காரர்கள்:-

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்காரர்கள் கி.பி. 1602-ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியை தோற்றுவித்தனர்.

கி.பி.1610-ல் “புலிகட்” என்றழைக்கப்படும் பழவேற்காட்டில் கோட்டை கட்டி அதை தங்கள் தலைமையிடமாக மாற்றினர்.

டச்சுக்காரர்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்ய ஆர்வமில்லை. நறுமணத்தீவு என்றழைக்கப்பட்ட இந்தோனேசியாவில் வணிகம் செய்தனர். வணிகப்போட்டியில் ஆங்கிலேயரை “அம்பாய்னா” என்ற தீவில் கொன்றனர். இதன் பெயர் 'அம்பாய்னா படுகொலை'.

ஆங்கிலேயர்கள்:-

லண்டன் நகர வியாபாரிகள் நூறுபேர் சேர்ந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை தோற்றுவித்தனர். கி.பி.1600 டிசம்பர் 31-ல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதி வழங்கினார்.

கி.பி.1608-ல் இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் கொடுத்த வியாபாரம் செய்ய அனுமதி கோரிய கடிதத்துடன் ஆங்கில மாலுமியான வில்லியம் ஹாக்கின்ஸ், ஜஹாங்கீரின்அரசவைக்கு வந்தார். வியாபாரம் செய்திட அனுமதி கிடைக்கவில்லை.

அதன் பின்னர், சர் தாமஸ் ரோ என்ற ஆங்கில வியாபாரி, வியாபாரம்  செய்வதற்கான அனுமதியினைப் பெற்றார்.

ஆங்கிலேயர்கள் சூரத், ஆக்ரா, பரோச், அகமதாபாத் ஆகிய இடங்களில் வாணிப மையத்தை ஏற்படுத்தினர்.
கி.பி.1639 ஆம் ஆண்டு பிரான்சிஸ்டே என்ற ஆங்கில அதிகாரி, சந்திரகிரி அரசரிடமிருந்து  ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி, தற்கால சென்னை நகரை நிறுவினார். இதில் கி.பி.1640-ல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுக்கல் நாட்டு இளவரசி காத்தரின் என்பவரை திருமணம் செய்ததால், சீர்வரிசையாக பம்பாய் கொடுக்கப்பட்டது. இதனை, இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டார்.

கி.பி.1699-ல் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் அனுமதி பெற்று கல்கத்தாவில் வணிக மையம் நிறுவப்பட்டது.

இவ்வாறாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் தங்களது வணிக மையங்களை ஏற்படுத்தினர்.

டேனியர்கள்:-

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் டேனியர்கள்.

டேனியர்கள், கி.பி.1620-ல் தரங்கம்பாடியிலும்,  கி.பி.1676-ல் வங்காளத்திலுள்ள சீராம்பூரிலும் வணிக மையங்களை நிறுவினர்.

பின்னர், இவற்றை ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

பிரெஞ்சுக்காரர்கள்:-

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான “கால்பர்ட்” என்பவரின் முயற்சியால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கி.பி.1664-ல் தோற்றுவிக்கப்பட்டது.

இவர்கள் கி.பி.1668-ல் சூரத்திலும், கி.பி1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வணிக மையத்தை ஏற்படுத்தினர்.

கி.பி.1674-ல் தஞ்சாவூர் மன்னரிடமிருந்து சென்னைக்கு தெற்கே ஒரு நிலப்பகுதியைப் பெற்று பாண்டிசேரியை நிறுவி, இதனை தலைமையிடமாக மாற்றினர்.

கி.பி. 1742-ல் டியூப்ளே, பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்றார்.

இறுதி ஆதிக்கப்போட்டி:-

இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து ஐந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், இறுதியில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் தான் ஆதிக்கப்போட்டி நிலவியது. இதன் விளைவாக இவர்களுக்குள் போர்கள் ஏற்பட்டன. அப்போர்கள் தான் கர்நாடகப் போர்கள்.


கர்நாடகப் போர்கள்

முதல் கர்நாடகப் போர்: கி.பி. 1746-1748 (அய்லா சாப்பேல் உடன்படிக்கை)

இரண்டாம் கர்நாடகப் போர்: கி.பி. 1748-1754 (பாண்டிச்சேரி உடன்படிக்கை)

மூன்றாம் கர்நாடகப் போர்: கி.பி. 1756-1763 (பாரிஸ் உடன்படிக்கை)

இரண்டாம் கர்நாடகப் போரில், இராபர்ட் கிளைவ் பங்கெடுத்து ஆற்காட்டைக் கைப்பற்றியதால், ஆற்காட்டின் வீரர் என அழைக்கப்பட்டார்.

Current Affairs 2020 - Free online Test-01
Ayakudi TNPSC Model Question Paper Pdf Free Download  
Akash IAS Academy Study Material Pdf Free Download  
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?


கருத்துரையிடுக

0 கருத்துகள்