என் கனவு.... அரசு வேலை...

டிஎன்பிஎஸ்சி (Group-IV) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முடிவு செய்தவுடன் முதலில் மனநிலையை அதற்கேற்றவாறு உருவாக்கி விடவேண்டும். பொதுவாக குரூப்-4 தேர்வினை 10 லட்சம் முதல் 13 லட்சம் மாணவர்கள் வரை எழுதுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வளவுபேர் எழுதக்கூடிய தேர்வில் நமக்கெல்லாம் வேலை கிடைக்கவா போகிறது? என்று தான் நமது மனதில் முதலில் நினைக்கிறது.

முதலில் இம்மாதிரி எண்ணங்கள் தான் நமக்கு முதல் எதிரி. இடையூறு… தடைக்கல்…. எல்லாமே. இந்த எதிர்மறை எண்ணத்தை போக்கிட அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தாற் போல் சொல்கிறேன் நாம் நினைக்க வேண்டியது என்னவென்றால்…… எத்தனை லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினாலும் நாம் நன்கு எழுதினால் நமக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை. இந்த நம்பிக்கை தான் நம்மை கரை சேர்க்கும். இது போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைந்தவர்களிடம் கலந்துரையாடிப் பாருங்கள். அவர்கள் சொல்லும் முதல் வேத வார்த்தை நம்பிக்கை பற்றி தான்.

தினசரி குறைந்தது 5 மணி நேரம் படிக்கத்தொடங்குங்கள். 15 நாட்கள் கடந்தவுடன் 5 மணி நேரம் என்பதை படிப்படியாக அதிகரித்து 8 மணிநேரம் வரை தினசரி படியுங்கள். ஒரு மாதம் இதனை ஒரு தவமாக நினைத்து தினசரி 8 மணி நேரம் படித்து முடியுங்கள். இப்போது நீங்கள் சொல்வீர்கள் நான் ஜெயித்து விடுவேன் என்று ஆம்மனமென்ற மந்திரச்சாவி உங்கள் வசப்பட்டு விடும்.

(பணியில் சேர்ந்த பின்னர் சில வருடங்களில் பதவி உயர்வு பெற்று 'தமிழ்நாடு அரசு' என பொறிக்கப்பட்ட ஜீப்பில் நானும் உயர் அதிகாரியாக வலம் வருவேன் என தினசரி ஒரு மூன்று நிமிடம் இதயப்பூர்வமாக நினைத்து இன்புறுங்கள். "கிரிக்கெட் ரிப்ளே" போன்று காட்சிப்படுத்தி மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் திரையிட்டுப் பாருங்கள். கனவு வசப்பட்டுவிடும்)

மேலும் அதிகாலை எழுந்து படிப்பது நல்ல பழக்கமாகும். தினசரி ஒரு மணி நேரமாவது பத்திரிகைகள் படித்து உலகம், இந்தியா, தமிழகம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை ஒரு நோட்டில் குறிப்பெடுத்து அதனை மனதில் பதிய வையுங்கள். எப்போதும் உற்சாகமாக சிரித்த முகத்துடன் "நாளை நமதே‬" என நம்பிக்கையுடன் இருங்கள். உங்களை எப்போது பார்த்தாலும் மட்டம் தட்டி ஏளனமாக எள்ளி நகையாடும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
 
நாம் இந்த ஜென்மத்தில் பிறந்திருப்பது ஒரு தடவை தான். இப்பிறவியில் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடமாவது அழுத்தமாக‬ நினையுங்கள். இப்போது நல்ல முயற்சி செய்யத் தவறிவிட்டால் இப்பிறவி முழுவதும் கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

எல்லாரும் ஏங்குவது ஒரே ஒரு வெற்றிக்குத்தான். அந்த வெற்றியை நோக்கி ஆர்வம் கொண்டு பீடு நடை போடுங்கள். வெற்றியை அடையும் வரை அலுப்பில்லை…. சளைப்பில்லை…… களைப்பில்லை…. காரியத்தில் கண்ணாயிருங்கள். உங்களுக்கு ஒர் அரசுப்பணி காத்திருக்கிறது. தபால்காரர் உங்களது நியமன ஆணையினை (Appointment Order) உங்களை தேடிக்கொண்டு வரும் நாளை எதிர்நோக்குங்கள். மீண்டும் சொல்கிறேன் நம்பிக்கைதான் வாழ்க்கை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன்.
 
நன்றி: தினத்தந்தி (08.08.2016) -“என் கனவு.. அரசு வேலை..” -
திரு.ஸ்ரீவில்லிபுத்தூர் க.மாரித்து. (சுருக்கப்பட்டது)
உதவி : Thambu C

கருத்துரையிடுக

0 கருத்துகள்