முல்லைப்பாட்டு

 10th Tamil முல்லைப்பாட்டு
TNPSC, TN Police, TNTET ஆகிய 
போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்

முல்லைப்பாட்டு  – நப்பூதனார்

நல்லோர் விரிச்சி கேட்டல்

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, 
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர 
இன்னே வருகுவர், தாயர்" என்போள் 
நன்னர் நன்மொழி கேட்டனம் 

சொல்லும் பொருளும்
நனந்தலை உலகம் - அகன்ற உலகம் 
நேமி - சக்கரம்
கோடு - மலை
கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
தூஉய் - தூவி
விரிச்சி - நற்சொல்
சுவல் - தோள்

இலக்கணக்குறிப்பு
  • மூதூர் - பண்புத்தொகை
  • உறுதுயர் - வினைத்தொகை
  • கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத் தொகை
  • தடக்கை - உரிச்சொல் தொடர்
பகுபத உறுப்பிலக்கணம் 
பொறித்த – பொறி + த் + த் + அ
பொறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

விரிச்சி என்றால் என்ன?
ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

நூல் வெளி - பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முல்லைப்பாட்டு பற்றிய குறிப்புகள் :
  • முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. 
  • இது 103 அடிகளைக் கொண்டது. 
  • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. 
  • இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்