ad

சிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்!

ElamBahavath K

பதிவு:1  நாள்: 02.08.2020
சென்னை அண்ணாநகரில் வீடுகளின் மாடிகளில் தங்கி படித்து வரும் சிவில் சர்வீசஸ் மாணவர்களை பார்த்திருப்பீர்கள். தீபாவளி பொங்கல் போன்ற எந்த விழாக்களுக்கும் ஊருக்கு போகாமல் வாழ்க்கையில் பிரெலிமினரி எக்ஸாமினேஷன், மெயின் எக்ஸாமினேஷன், இன்டர்வியூ என்ற மூன்று விழாக்கள் மட்டுமே கொண்டாடும் வித்தியாசமான ஜீவன்கள்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிவில் சர்வீஸ் படிப்பதற்காக ஊரிலிருந்து கிளம்பி சென்னையில் அறை எடுத்து படிக்கின்றனர்.  தனது மகன் ஐஏஎஸ் ஆகிவிடுவான் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி அறை வாடகையும் சாப்பாட்டு செலவையும் பூர்த்திசெய்யும் பெற்றோர்கள், சில ஆண்டுகளில் சோர்ந்து விடுவது இயல்பு. நான் கண்ட வகையில் சிவில் சர்வீஸ் மாணவர்கள் மிகுந்த மன உறுதியும், தன்னம்பிக்கையும் உடையவர்கள். இந்த அட்டம்ட் வரவில்லை என்றால் என்ன அடுத்த அட்டம்டில் கண்டிப்பாக வாங்கி விடுவேன் என்ற தளராத நம்பிக்கையுடன்  படிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சமூக, கல்வி பின்புலத்திலிருந்து வந்து, சக மாணவர்களை பார்த்து தனது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு தீவிரமாக முயல்கிறார்கள். அடுத்தவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் பியர் லேர்னிங்க் (Peer learning) தேர்வு தயாரிப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மிக அதிக வாடகை உள்ள அண்ணாநகர் போன்ற இடங்களில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் ஐந்து மாணவர்கள் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழ்வதும், அதற்காக வீட்டு உரிமையாளர்கள் ஐஏஎஸ் மாணவர்களுக்கு மட்டுமே வீடுகள் தருவேன் என்று தனது வீடுகளை ஒதுக்கி வைத்திருப்பதும் ஒரு அழகான புரிதல்!

சில காலத்திற்கு முன்னால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள நூம்பல் என்ற கிராமத்தில் ஐஏஎஸ் மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். அந்த கிராமமே ஐஏஎஸ் கிராமம் என்று அழைக்கப்பட்டது. பிறகு சென்னை அண்ணாநகரில் அரசு பயிற்சி மையத்தை சுற்றி மாணவர்கள் தங்கிப் படிக்க தொடங்கினார். தற்பொழுது சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை சுற்றியும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவ்வாறு மாணவர்கள் சென்னையில் தங்கிதான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சென்னையில் தங்கி படித்ததில்லை. ஊரிலேயே நூலகம், பூங்கா போன்ற ஒரு படிப்பதற்கான உகந்த சூழலை கண்டடைவது ஒவ்வொரு சிவில் சர்வீசஸ் மாணவனுக்கும் தேவை. நான் பட்டுக்கோட்டை நூலகத்திலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் மணி மண்டபத்திலும்தான் படித்தேன். இங்கு ஒரு நல்ல நண்பர்கள் குழுவை உருவாக்கி கொண்டேன். அது எனது தேர்வு தயாரிப்பிற்கும், அவர்களின் தேர்வு தயாரிப்புக்கும் பெரிய ஊக்க சக்தியாக இருந்தது.

சிவில் சர்வீசஸ் தயாரிப்பு என்ற அற்புத உலகத்தில்  நிலவும் விசித்திரமான பழக்கங்களையும், வித்தியாசமான நபர்களையும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

செல்ஃபிஸ் செல்வங்கள்!
என்ன படிக்கிறோம் என்று அடுத்தவருக்கு காட்டாமல் ரகசியமாக மெட்டீரியல்களை மறைத்து வைத்துப் படிக்கும் செல்ஃபிஸ் செல்வங்கள். இதற்காக இவர்கள் ரகசியமாக படிக்கும் மெட்டீரியல்களோடு 3, 4 உதவாக்கரை மெட்டீரியல்களை அடுக்கி வைத்துக்கொண்டு யாராவது அறைக்கு வந்தால் வந்தால்,  அந்த மெட்டீரியல்களில் எடுத்து படித்து கன்ஃபூஷன் பண்ணும் நற்பண்பும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு எல்லாம் தங்கள் பக்கத்து அறைக்காரன்தான் போட்டி என்ற நினைப்பு.  எனக்குத் தெரிந்து இந்த வகையினர் பலர் வெற்றிகளைத் தவற விட்டுவிட்டுள்ளனர்.

ஸ்ட்ரைட்டா சீப் செகரட்டரி தான்!
ஐஏஎஸ் மாணவர்கள் சிலர் வேறு எந்த போட்டித் தேர்வுகளையும் எழுத மாட்டார்கள். தொடக்கத்தில் ஒன்லி ஐஏஎஸ், அதுவும் ஹோம் கேடர் பாஸ், இல்லேன்னா விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் என்று இவர்கள் விடும் சவுண்டில் நமக்கு கொஞ்சம் ஜெர்க் ஆகும்! ஆண்டுகள் கடக்க கடக்க, எடுத்த சபதத்தையும் முடிக்க முடியாமல் அடுத்த வேலைக்கும் போக முடியாமல் இவர்கள் சிரமப்படுவது அவர்கள் வளர்க்கும் தாடியில் தெரியும்! நாலாவது அட்டம்ட்டில் இன்டர்வியூ வரும்பொழுது ஐ.ஆர்.எஸ் கிடைச்சா கூட போதும் பாஸ் அப்படியே செட்டில் ஆயிடலாம் என்பார்கள்! சிலர் இறுதிவரை வீம்பாக உட்கார்ந்துகொண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு, வங்கி தேர்வு போன்ற எந்த தேர்வுகளையும் எழுதாமல் சிவில் சர்வீசஸ் மட்டுமே எழுதுவேன் என்று இருப்பார்கள். அவர்கள் அடைந்தால் மகாதேவி இல்லை என்றால் மரணதேவி வகை! சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பு, என்று லட்சியவாதம் பேசும் இவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைக்கும் வேறு வாய்ப்புகளை  புறக்கணிப்பது எவ்வகையில் சரி என்று எனக்குப் புரியவில்லை. ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது!

மெட்டீரியல் ஹன்டர்ஸ்!
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நெருங்க நெருங்க டெல்லியிலிருந்து மெட்டீரியல்கள் பல இறங்கத் தொடங்கும். நம் உள்ளூர் இன்ஸ்டியூட்களும் புல்லெட் பாயிண்டில் பல மெட்டீரியல்களை இறக்கி விடுவார்கள். டேய் டெல்லியில் புதுசா வாஜிரம் நோட்ஸ்  ஒன்னு போட்டு இருக்காங்க டா. இத படிச்சே ஆகணும் என்று இவர்கள் ஜெராக்ஸ் கடைகளில் மெட்டீரியல்களை காப்பி செய்து, நாள் ஒரு மெட்டீரியல், தினம் ஒரு பீதி என்று கிளப்பி கொண்டிருப்பார்கள். உண்மையில் இது போன்று கடைசி நேரத்தில் வாங்கிப் படிக்கும் மெட்டீரியல்களில் இருந்து ஒரு கேள்வியும் வராமல் போன நிகழ்வுகள் நிறைய! ஆனாலும் இந்த மெட்டீரியல் ஹன்டர்களின் அலப்பறைகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறன. இவர்களை வைத்து பல ஜெராக்ஸ் கடைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எந்த ஒரு பேராசிரியரும் இந்த கோச்சிங் இன்ஸ்டியூட்களின் மெட்டீரியல்களைப் பார்த்து வினாக்களை எடுக்கப் போவதில்லை. நிலையான பாடப்புத்தகங்கள் மற்றும் செய்தித் தாள்களில் இருந்து எடுத்த குறிப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

குரூப் டிஸ்கஷன்குழப்பங்கள்!
குரூப் டிஸ்கஷன் என்பது நல்ல படிப்புமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், குரூப் டிஸ்கஷனுக்கு ஒரு திட்டமிடுதலும், ஒழுங்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் டிஸ்கஷன் திசைகெட்டு ஓடி நேரம் வீணாகும். ஒவ்வொரு நாளும் குரூப் டிஸ்கஷன் உட்காருகிறேன் என்று சொல்லி, தான் இந்து பேப்பரில் எட்டாம் பக்கத்தில் சிறு செய்தியாக படித்ததை பெரிய ஆர்டிகிள் ரேஞ்சுக்கு சிலர் பேச தொடங்குவார்கள். அதற்கு கவுண்டர் கொடுப்பதற்கு மற்றொரு நபர் EPW-ல் படித்த ஆர்டிக்கிள் ஒன்றை எடுத்துவிடுவார்.  இதையெல்லாம் எந்த நியூஸ் பேப்பர்ல படிக்கிராங்கன்னு தெரியலையே, நாம எல்லாம் வேஸ்ட் என்று மற்றவர்கள் கண்ணில் பயம் பரவும். நான் குரூப் டிஸ்கஷனில் நிறைய ஈடுபட்டிருக்கிறேன். ஆனால், அதில் யாராவது ஒருவர் ஒழுங்குபடுத்துபவராக இருந்து டிஸ்கஷனை முன் எடுக்கவேண்டும். அதேபோன்று டிஸ்கஷனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு  நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு விஷயமாக இருந்தாலும் அந்த காலத்திற்குள் பேசி முடித்துவிட வேண்டும். டிஸ்கஷனில் பங்கேற்கும் குழு 5 லிருந்து 10 நபர்களுக்குள் இருக்க வேண்டும். அதேபோன்று குரூப் டிஸ்கஷன் நடக்கும் இடம் மற்றவர்களுக்கு தொல்லைதராத ஒரு இடமாக இருக்க வேண்டும்.

இரவுக் கோழிகள்!
சிலர் இரவு நேரத்தில் முழுவதும் விழித்திருந்து படிப்பார்கள். பகல் நேரத்திலும் அவர்கள் படித்துக் கொண்டிருப்பது தெரியும். எப்பொழுது தூங்குகிறார்கள் என்பதே தெரியாது. மன அழுத்தம் காரணமாகவும், தேர்வு அழுத்தம் காரணமாகவும் பலநாட்கள் தூக்கம் வராமல் படிக்கும் மாணவர்கள் தங்களது உடல் நலனை பார்த்துக் கொள்வது அவசியம். இந்த இரவு கோழிகள் பட்டியலில் நானும் பல காலம் இருந்திருக்கிறேன். எனது, ரைட்டிங் பேடில் Miles to go before I sleep என்ற ராபர்ட் ஃபிராஸ்டின் கவிதையை எழுதி ஓட்டியிருப்பேன். என் கண்களில் கருவளையங்களை பரவ விட்டதில் இந்த படுபாவி ராபர்ட் ஃபிராஸ்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு! மாணவர்கள் ஒரு மனிதனுக்கு தேவையான இயல்பான 8 மணிநேர தூக்கத்தை தூங்கிவிட வேண்டும். இதனால் படித்ததை எளிதாக ஞாபக அடுக்குகளிலிருந்து எடுத்து தேர்வுகளை எதிர் கொள்ளலாம்.

தேர்வு எழுதா தேர்வர்கள்!
ஒருமுறைகூட மாதிரி தேர்வு எழுதிப் பார்க்காது நேரடியாக யுபிஎஸ்சி மெயின் தேர்வு எழுதும் மாணவர்களை கண்டிருக்கிறேன். இவர்கள் படித்துக் கொண்டே இருப்பார்கள். மாடல் டெஸ்ட் என்றால் பயம், அதனைத் திருத்தச் சொல்வதில் பயம், ஃபீட் பேக் கேட்பதில் பயம், மார்க் பார்ப்பதில் பயம்,  என்று தெனாலி போன்று பல பயங்கள்! இவர்கள் இறுதிவரை தேர்வுகளை எதிர் கொள்ள தயங்குவார்கள்.  ஒவ்வொரு நாளும் சில வினாக்களை மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பதும் அதனை திருத்தி பார்ப்பதும் மிக முக்கியமான பயிற்சி. இது கால மேலாண்மைக்கு பெரிதும் உதவும். ஒருமுறைகூட பயிற்சி செய்யாத வீரன் எவ்வாறு களத்துக்குச் சென்று ஆட முடியும். தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதில்  கிடைக்கும் கசப்பான அனுபவங்களை ஆக்கபூர்வமாக உள்வாங்க வேண்டும். இதன் மூலம் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை முறை தவறாக பயிற்சித் தேர்வு எழுதினாலும் தவறில்லை. இறுதியில் சரியாக யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்பதே முக்கியம்.
அற்புத உலகத்தில் மேலும் பயணிக்கலாம்.

Post a Comment

0 Comments